பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

தமிழருட் பல வகுப்பார், அவருள்ளும் சிறப்பாய்த் தாழ்த்தப்பட்டவர் தந்தையை ஐயன் என்றே அழைக்கின்றனர். ஆசிரியனும் ஒருவகையில் தந்தையொப்பான் என்னும் கருத்துப்பற்றி ஐயன் என்று அழைக்கப்படுவதுண்டு. வடார்க்காட்டுப் பகுதியில் ஆசிரியர் எவ்வகுப்பினராயினும் ஐயர் என்றே அழைக்கப்பெறுகின்றனர்.

பெரியோரையெல்லாம் என்றும் ஐயா என்றே அழைப்பது தமிழர் வழக்கம். அது ஐயன் என்பதின் விளிவேற்றுமை வடிவமாகும். மக்களுட் பெரியோர் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ்நூன் மரபு.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

(தொல். 1091)

என்று கூறுவது இம் மரபுபற்றியே. இங்ஙன மெல்லாயிருப்பினும், ஐயன் என்பது ஆர்ய என்னும் வடசொற் சிதைவென்று சென்னையகராதி கூறுவது எத்துணை இழிவான செயல்!

வடவை அல்லது வடந்தை என்பது, வடம் (வடக்கு) என்னும் திசைப் பெயரினின்று திரிந்து, வடதிசையில் தோன்றும் நெருப்பு என்று பொருள்படும் தூய தென்சொல். இதற்கு நேரான (Aurora borealis என்னும் இலத்தீன் சொல்லும், வடக்கத்து நெருப்பு என்றே பொருள்படுவதாகும். தாயுமானவர் ‘வடவனல்’ என்றே தெளிவாகச் சொல்லுகின்றார். அங்ஙனமிருந்தும், வடவை என்பதை வடவா-வடவாமுகம்-படபாமுகம் எனத் திரித்து, பெட்டைக்குதிரை முகத்தில் தோன்றும் நெருப்பு எனப் பொருள் கூறுவது, உத்திக்கும் உண்மைக்கும் பொருந்துமா என்று பகுத்தறிவுடையார் கண்டுகொள்க.

இருமொழிகள் சிறிது காலம் அடுத்தடுத்து வழங்கினும், ஒன்றினின் றொன்று கடன் கொள்வது இயல்பு. ஐயாயிரம் ஆண்டுகளாக, நாகரிகம் நிரம்பாது வந்த ஆரியர் மொழியும் நாகரிகம் நிரம்பியிருந்த தமிழர் மொழியும் ஒரேயிடத்தில் வழங்கி வந்திருப்பின், முன்னது பின்னதினின்று எத்துனை ஆயிரக்கணக்கான சொற்களைக் கடன்கொண்டிருத்தல் வேண்டும்! தமிழரும் பெரும்பாலார் தம் தாழ்வுணர்ச்சியால் இதையுணரும் மதுகையில்லாதிருப்பினும், வடமொழி தேவ மொழியாதலால் பிறமொழியினின்று கடன்கொள்ளாதென்னும் ஏமாற்றுரை, ஆராய்ச்சியாளரிடம் எங்ஙனம் செல்லும்? வடமொழியில் ஆயிரக்கணக்கான தென்சொற்களிலிருந்தும், வடமொழியகராதிகளுள் ஒன்றுகூட ஒரு சொல்லையும் தென்சொலென ஒப்புக்கொள்வதில்லை. இஃதொன்றே, வடமொழியாருக்குத் தென்மொழி மீதுள்ள வெறுப்பைக் காட்டப் போதுமே!

சென்னை யகராதியில், அகரம் முதல் ஊகாரம் வரை, 506 பக்கம் ஏராளமான தென்சொற்களை, சிறப்பாக, கூட்டுச்சொற்களையும் தொடர்ச் சொற் களையும், வரை துறையின்றி விருப்பம்போல் உடுக்குறியிட்டு வடசொல்லாகக் காட்டியிருக்கின்றனர். கூட்டுச்சொற்களிலும் தொடர்ச் சொற்களிலும் ஒரு