பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

துணிந்துவிட்டனர். இக் கொள்கையை சென்னை யகராதியுங் கொண்டுள்ளது. அதனால், சாயுங்காலம், சாயுந்தரம் என்னும் வடிவுகளை அது காட்டவில்லை. அதோடு, சாயந்தரம் என்பதை சாயம்+அந்தர(ம்) என்றும் பிரித்துள்ளது.

இங்ஙனமே, முகம்-முகன் (mukha) என்பதை மு+கன் என்றும், நிலையம் (நிலய) என்பதை நி+லய என்றும், பிரித்து வடசொல்லாகக் காட்டுவர். முகு+அம்= முகம். நில்-நிலை-நிலையம்.

இவ்வாறு தென்சொற்களைத் தன் சொற்களென்று காட்டும் வடநூல் ஏமாற்றமெல்லாம் என் வடமொழி வரலாறு விரிவாக விளக்கும்.

7. ஒரு சொல்லைப் பல சொல்லாகக் காட்டல்

இறுத்தல் என்னும் சொல்லுக்குரிய, முடித்தல் (தீர்த்தல்), வரிகொடுத்தல் என்னும் இருபொருளும் நெருங்கிய தொடர்புடையவை. ஒரு காவலன் தன் குடிகளைக் காக்கின்றான். அக் காப்புப்பற்றிக் குடிகள் அவனுக்குக் கடன்பட் டுள்ளனர். அக் கடனைத் தீர்ப்பதே இறை அல்லது வரி. இறுப்பது இறை. இறுத்தல்-தீர்த்தல், கடன் தீர்த்தல். தீர்த்தல் (முடித்தல்), வரி கொடுத்தல் ஆகிய இருபொருளையும் வேறாகக்கொண்டு, இறுத்தல் என்னும் ஒரே சொல்லை இருசொல்லாகக் காட்டியுள்ளது சென்னை யகராதி.

இங்ஙனமே, தீர்த்தல், தீர்வை என்னும் இரண்டும் தீர் என்னும் ஒரே சொல்லாகும். இதனையும் இருசொல்லாகக் காட்டியுள்ளது அவ் வகராதி. Fine என்னும் சொல்லைப்பற்றி ஆக்கசு போர்டு சிற்றகராதி எழுதியிருப்பதைப் படித்து, இவ் வுண்மை தெளிக.

8. பல சொல்லை ஒரு சொல்லாகக் காட்டல்

கரைதல் என்னும் சொல்லிற்கு,

1. கரைந்துபோதல்,

5. வருந்துதல்,

9. பதனழிதல்,

2. உருகுதல்,

6. தாமதித்தல்,

10. அழைத்தல்,

3. இளைத்தல்,

7. ஒலித்தல்,

11. சொல்லுதல்

4. கெடுதல்,

8. அழுதல்,

எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள. இவற்றுள், முதலாறும் ஒன்பதாவதும் மறைதற் பொருள்தரும் கர என்னும் வேரினின்று பிறந்த கரை என்னும் சொல்லிற்குரியவாம்; ஏனையவெல்லாம் ஒலித்தற் பொருள் கொண்ட கர என்னும் வேரினின்று தோன்றிய வேறொரு கரை என்னும் சொல்லிற்குரியவாம். இங்ஙனம், இரு வேறு சொற்கள் வடிவொப்புமைபற்றி ஒரு சொல்லாகக் காட்டப்பட்டுள.

கள் என்னும் வேரினின்று பிறந்த கட்டை (திரண்ட மரத்துண்டு) யென்னும் சொல்லும், குள் என்னும் வேரினின்று பிறந்த குட்டையென்னுஞ் சொல்லின் திரிபான கட்டை யென்னும் சொல்லும், வெவ்வேறாம். ஆயினும், இவற்றை ஒரே சொல்லாகக் கொண்டுள்ளது அகராதி. இதற்கெல்லாம் தொகுத்தவரின்

சொல்லாராய்ச்சியின்மையே காரணம்.