பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

VIII. சென்னைப் பல்கலைக்கழக

அமைப்புக் குறைகள்

(1) அதிகாரிகளைப் பற்றியவை

சென்னைப் பல்கலைக்கழகக் கண்காணகர் (Chancellors) ஆங்கிலேய ஆட்சிக் காலமெல்லாம் ஆங்கிலேயரா யிருந்தனர். அதனால், அவர் தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொள்ளவில்லை. அதன்பின், தமிழ்நாட்டிற்கு விடுதலை வந்ததென்று சொல்லப்பட்டும், தமிழரோ, தமிழறிந்தவரோ தலைவராகாது, தமிழறியாத வடநாட்டாரே தலைவராகி வருகின்றனர்.

பல்கலைக்கழகத் தமிழகராதி தொகுக்கப்பட்ட காலமெல்லாம் (1913-39) துணைக் கண்காணகரா யிருந்தவரும் தமிழறியாதாரும் தமிழ்ப்பற்றற்றவருமான ஐரோப்பியரும் பிராமணரும் தெலுங்கரும் மலையாளியருமே. யாரேனும் ஒருவர் தமிழ்க்குடிவழிவந்து தமிழக்குலப் பட்டப்பெயரே தாங்கித் தமிழரென்று கருதத்தக்கவரா யிருப்பினும், அவர் தம்மைத் தெலுங்கரென்று சொல்பவராயும், பல்கலைக்கழகச் சொற்பொழிவுகளையெல்லாம் ஆங்கிலத்திலேயே ஆற்றுபவ ராயும் தனித்தமிழை வெறுப்பவராயு முள்ளனர். எதிர்காலத்தில் பண்டாரகர் மணவாள இராமானுசம் போன்றவர் துணைத் தலைவரானா லொழிய, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்தற்கிடமே யில்லை.

பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருள்ளும், தமிழ்ப் புலவரோ, தமிழ் மரபைப் போற்றுபவரோ ஒருவருமில்லை. வடமொழிச் சார்பான ஒரு கட்சியாட்சியைத் துணைக்கொண்டு, வடமொழிக்கின்றுள்ள தலைமையை நிலைநிறுத்திவிட வேண்டுமென்பது, கண்ணாடிக் கூடைக்காரன் கனவாகவே முடியும்.

(2) தமிழ்த்துறைத் தலைவரைப் பற்றியவை

மொழித்துறையில் தமிழ்நாட்டிலும் சமற்கிருதமே தலைமையாயிருப்பது போல், கூட்டரவு (சமுதாய)த் துறையில் வடமொழிப்பற்றுள்ள பிராமணரே தலைமையா யிருப்பதால், தனித்தமிழ்ப் பற்றுள்ள ஒரு புலவரும் சென்னைப் பல்கலைக்கழகத்தில், பொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பதவியைத் தாங்கும் நிலைமை யிருந்ததில்லை. அதனால், பட்டம் பதவி பெறுவதையும் பெரும்பொரு ளீட்டுவதையும் குறிக்கோளாகக் கொண்ட தனித்தமிழ்ப் பற்றற்ற தமிழ்ப் புலவரே, பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக முடிந்தது.