பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சென்னைப் பல்கலைக்கழக அமைப்புக் குறைகள்

45

என்னைத்தவிர வேறெவரும் இப் பணியைச் செய்யவியலாதென்று அறிந்திருந் தும், தமிழ் கெடினும் தம் பெயர் கெடக்கூடாதென்று அவ் வகராதித் திருத்தத் தைத் தடுத்துவிட்டனர்.

இனி, சென்னைப் பல்கலைக்கழகம் தொகுத்த அகராதிக்குறைகளை அண்ணாமலை பல்கலைக்கழகம் எடுத்துக்காட்டக்கூடாதென்றும், அண்ணா மலை பல்கலைக்கழகம் தமிழைத் தூய்மையாக அல்லது சிறப்பாக வளர்ப்பின் பல்கலைக்கழக நல்கைக்குழு (U.G.C.) நல்கும் நல்கை குன்றிவிடுமென்றும், இரு கருத்துகள் உலவி வருகின்றன.

இவற்றையெல்லாம் நோக்கும்போது, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியைத் திருத்தவேண்டிய முழுப்பொறுப்பும், கடமையும், சென்னைப் பல்கலைக்கழகத்தையே சார்கின்றது. அகராதியைப்பற்றிக் 'குறைகூறினால் வேலை போய்விடுமோவென்றும், தேர்வாண்மையும் (Examinership), பாடக்குழு வுறுப்பாண்மையும் (Membership of Board of Studies) பிற வாய்ப்புகளும் நீங்கி விடுமோவென்றும்; தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்பேராசிரியரும் அஞ்சி வாய்திறவா திருக்கும் நிலையில், பொதுமக்கள் பணத்தில் பெருந்தொகையைச் செலவிட்டுப் பக்கந்தொறும் பிழைமலியத் தொகுத்ததும், தமிழ் வடமொழிக் கிளையான ஒரு கலவைமொழி என்று காட்டி தமிழுக்குக் கேடும் தமிழனுக்கு இழிவும் உண்டாக்குவதுமான (4351 பக்கங்கொண்ட) அகராதியை உடனே திருத்த ஏற்பாடு செய்யுமாறு, இத் தமிழாட்சிக் காலத்திலேனும் தமிழ்க்கழகங்களும் பொறுப்புவாய்ந்த பொதுமக்களும், சட்டசவை யுறுப்பினரும், சென்னைப் பல்கலைக்கழக அதிகாரிகளை வற்புறுத்துவாராக.

சென்னைப் பல்கலைக்கழகம் செய்த வழுவைச் சென்னைப் பல்கலைக்கழகமே களைதல் வேண்டும். அப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியாற்றுமாறு தகுதியுள்ள எவரையும் அமர்த்திக்கொள்ள, அப் பல்கலைக்கழக அதிகாரிகட்கு முழு உரிமையுண்டு. ஆயின், தகுதியில்லாதவரை யமர்த்தித் தமிழைக் கெடுக்க அதிகாரமோ உரிமையோ அவர்கட்கு அணுவளவுமில்லை. ஆதலால், சென்னைப் பல்கலைக்கழகம் அது வெளியிட்ட அகராதியை உடனே திருத்தாவிடின், தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகமே நிறுவப்பெறுதல் வேண்டும்.