பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

யான் ஓராண்டு நடுநிலைப் பள்ளியிலும், இருபத்தீராண்டு உயர் நிலைப்பள்ளிகளிலும், பன்னீராண்டு கல்லூரியிலும், தமிழாசிரியனாகப் பணியாற்றினேன். இவற்றுள் உயர்நிலைப்பள்ளி யிரண்டு, கல்லூரி ஒன்றும் ஆக முக்கல்வி நிலையங்களே கிறித்தவ மதச் சார்பற்றவை. ஏனையவெல்லாம் கிறித்தவக் கல்வி நிலையங்களாதலின், அவற்றில் எளிதாய் எனக்கு வேலை கிடைத்தது.

உயர்நிலைப்பள்ளி யிரண்டனுள், முதலது பிரம்பூர்க்கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி; இரண்டாவது சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி. முதலதில் வேலை கிடைத்தற்குக் கரணியம், பேராயக் கட்சிப் பெருமகனும் பெயர் பெற்ற அறுவையரும் (Surgeon) பிராமணருமான காலஞ்சென்ற பண்டகர் (Dr.) மல்லையாவின் பரிந்துரையே. மேலும், அக்காலத்தில் என் மொழியாராய்ச்சி அரும்பியிருந்ததேயன்றி மலர்ந்திலது. இரண்டாவதில், பண்டாரகர் (Dr.) அரசமாணிக்கனாரின் பரிந்துரையும், தமிழ்ப் பெருமகன் (C.D.) நாயகம் அவர்களின் தமிழ்ப்பற்றும், அற்றைப் பள்ளியாளுங் கணத்தாரின் தமிழவுணர்ச்சியுமே கரணியம்.

கல்லூரி, சேலத்து அற்றை நகராட்சிக் கல்லூரி. அதில் முன்பு தலைமைத் தமிழாசிரியப் பதவியும் பின்பு தமிழ்ப் பேராசிரியப் பதவியும், ஈடும் எடுப்புமற்ற உயர்திரு. இராமசாமி அவர்களின் தமிழார்வத்தாலும், நகராட்சித் தலைவர் திரு. இரத்தினசாமி அவர்களின் தமிழ்ப் பண்பாட்டாலும், நகராட்சித் தலைவர் திரு. இராமலிங்கனார் அவர்களின் தமிழ்ப் பற்றாலும் எனக்குக் கிட்டின. தமிழ்நாட்டில் தமிழரையே முதல்வராகக் கொண்ட எத்தனையோ கல்லூரிகளிருந்தும் சேலங் கல்லூரி ஒன்றிலேயே எனக்கு வேலை கிடைத்ததும், அங்குப் பன்னீராண்டு பணியாற்றியும் இன்று சொற்பொழிவாற்றவும் எனக்கதில் இடமில்லாதிருப்பதும், பேராசிரியர் இராமசாமியார் அவர்கள் தமிழ்ப்பற்றின் பேரெல்லையை உணர்த்துகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகமா யிருந்தும் அதில் தமிழ் சரியாய்ப் பேணவும் கவனிக்கவும் பெறாமையால், தமிழ் மொழியிலக்கியப் பண்பாட்டைத் தகுந்த முறையில் வளர்ப்பதையும், உலக முழுதும் பரப்புவதையுமே சிறந்த குறிக்கோளாகக் கொண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகம் காலஞ்சென்ற அரசவயவர் அண்ணாமலையார் அவர்களின் அருமுயற்சி யால், 1929ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பெற்றதென்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், கால் நூற்றாண்டிற்கும் மேற்பட அஃது எனக்கு அண்ணாமலை யாகவே இருந்தது.

அதில், தமிழ் ஆராய்ச்சித்துறை ஏற்பட்டபொழுது துறைத் தலைவரைத் தெரிந்தெடுத்தமைத்தற்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் முப்பெயர்ப் பட்டியொன்றை வேண்டியதாகவும், அவ் வேண்டுகோட்கிணங்கி என் பெயர் உள்ளிட்ட ஒன்றைத் தாங்கள் விடுத்ததாகவும் தவத்திரு மறைமலையடிகள்