பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

63

தேராதூன் பள்ளியில் பயின்றபோது, தமிழில் நால் நிறத்திற்கே சொற்களுண்டென்று பேராசிரியர் தெ.பொ. மீ. கூறியதாகக் கிளீசன் துரை வகுப்பிற் சொன்னதும்; அப் பேராசிரியரின் சென்னை மாணவியர் Bank என்பதற்குத் தமிழ்ச்சொல் 'பாங்கி' என்று வகுப்பில் எழுந்து அத் துரை மகனார்க்கு விடையிறுத்ததும்; பேரா. சீகண்டையா ஹொன் என்னும் கன்னடச் சொல் பொன் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபென்று மாணவர்க்குக் கூறிய போது, வண்ணனை மொழியியல் வகுப்பில் வரலாற்று மொழியியலைப் புகுத்தல் தகாது என்று பேரா. தெ. பொ. மீ. கண்டித்ததும், தமிழில் எட்டு வேற்றுமையும் சமற்கிருத வேற்றுமையமைப்பைப் பின்பற்றினவென்று கால்டுவெல் தவறாகக் கூறியதை மறுக்காது, அதையே தேற்றஞ் செய்து வடநாட்டுத் தமிழ் மாணவர்க்குத் தமிழைப்பற்றித் தாழ்வான எண்ணம் படுமாறு அவர் கற்பித்ததாக நான் கேள்விப்பட்டதும் மிக வருந்தத்தக்க செய்திகளாகும். வேனிற் பள்ளி முடிந்தபின் அண்ணா மலைநகர் திரும்பினேன்.

பர். சட்டர்சியின் அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறைத் திறப்புவிழாத் தலைமையுரை, பின்னர் நீட்டியுங் கூட்டியும் வரையப்பட்டு வெளியிடப் பெற்றது. அது பகுதியளவில் (demy size) சிறு குக்கில் (small pica) எழுத்தில் 34 பக்கங்கொண்டது. அதில், அவர் தமிழைப் பற்றிய தம் மதிப்பீட்டைப் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றார்:

உண்மையில் கழக (சங்க) இலக்கியமென்னும் பழந்தமிழிலக்கியப் பகுதிகளை நான் முதன்முதல் (ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாய்ப்) படித்தபோது, சமற்கிருத இலக்கியத்திலும் மறைவில்லாது அதன் சூழ்வெளிக்கு அல்லது வட்டத்திற்கு உட்பட்ட பிற இந்திய இலக்கியத்திலும் இல்லாத புதுமையை அஃது அளித்ததைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். முதுபழங்காலத்துத் தமிழக் குமுகாய (சமுதாய)ச் சூழ்வெளி, இராமாயணம் மகாபாரதம் போன்ற வற்றாலும், புராணங்களாலும், செந்திறச் சமற்கிருத இலக்கியத்தாலும், வட இந்திய ஆரிய மொழிகளிற் போன்றே தென்னிந்தியத் திராவிட மொழிகளிலு மிருக்கும் இடைக்கால இலக்கியங்களாலும், காட்டப்பெறும் சூழ்வெளியினின்றும் வேறுபட்ட சில கூறுகளைக் காட்டுவதாய்த் தோன்றிற்று. தமிழிலக்கியத்தில் வாழ்க்கையை அடுக்கும் வழியும், அதன் மறநிலைச் சூழ்வெளியும், இந்திய இலக்கியத்துறைக் களத்தில் ஒரு தனிப்பட்ட நிலைமையைக் காட்டின. களவென்றும் கற்பென்றும் இருபெருந் தொகுதிகளாக அல்லது வகுப்பாகக் காதலை வகுத்த பழந்தமிழ் வகையீடு, ஆரிய இலக்கியம் என்பதின் அல்லது சமற்கிருதத்தின் கண்டிப்பான மரபியற் கருத்திற்கு மாறாகப் போவதாய்த் தோன்றிற்று. (களவென்பது வளர்ச்சியடைந்த இளந்தையரிடைப்பட்ட ஒருவகைக் கட்டுப்பாடற்ற காதலைக் குறிக்கும். இது, நன்று திருந்தின குமுகாயத்திற்போல் வளர்நிலையர் அல்லது இளந்தையரிடைப்பட்ட உறவியல்கள் சிறந்த முறையில் மரபியலொழுங்குபடுத்தப் பெறாத முந்தியல் மாந்தரினத்துள் மிக இயற்கையாகக் காணப்படுவதாகும். கற்பென்பது, சட்டமுறைத் திருமணத்தின் பிற்பட்ட