பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




73

என் அண்ணாமலை நகர் வாழ்க்கை வங்கப்பாட்டும் வந்தே மாதரப் பாட்டும் தமிழிற்கும் தமிழிசைக்கும் தோன்றிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தை விட்டு நீங்கிய பாடில்லை'.

புதுக்கோட்டையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்ப்பணி செவ்வையாய் நடைபெறவில்லையாமே யென்று ஒருவர் கேட்டதற்கு, அரசவயவர் முத்தையா அவர்கள் அது தவறென்று சொன்னதுடன் அமையாது, “வடநாட்டினின்று பணம் வரவேண்டியிருக்கிறது. அது வந்தபின் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார்கள்.

பேரா. தெ.பொ.மீ. ஆரியக் கொள்கையினராதலால், வடநாட்டில் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதென்றும், அதனாற் பல்கலைக் கழகத்திற்கு நிரம்பப் பணம் வந்து சேர்கிறதென்றும் சொல்லப்படுகின்றது. என்னாலோ, வருகின்ற பணம் குறையுமேயன்றிக் கூடாது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையினும் அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சீர்கெட்டது. அறிவியல் துறைக் கட்டடத்திற்கு அடிப்படைக்கல் நாட்டத் தில்லையிலிருந்து ஒரு பிராமணர் வந்து ஆரிய மந்திரமோதித் தீ வளர்த்தார்.

ஆகவே, ஆரிய ஏமாற்றம் அடியோ டொழிந்தாலொழிய, தமிழுக்கு இனி நற்காலமில்லை யென்பதைத் தெளிவாய் உணர்ந்தேன். என்பாற் பற்றுள்ள என் நண்பரோ, “ஏனைய தமிழ்ப் பேராசிரியரெல்லாம் ஆரியத்தோடு ஒத்துப் போகும் பொழுது. நீங்கள் மட்டும் ஏன் தனியாக அதை எதிர்க்கிறீர்கள்? நீங்களும் ஒத்துப் போகிறதுதானே! இன்னுஞ் சில்லாண்டு பதவியிலிருக்கலாமே! இந்தக் காலத்தில் வேறெங்கே ஐந்நூறுருபா கிடைக்கும்?" என்றெல்லாம் சொன்னார்கள். ஆயினும் உளம் ஒப்பவில்லை. என்ன தீங்கு நேரினும் உண்மையை எடுத்துச் சொல்வது ஆராய்ச்சியாளன் கடமையென்றும் மிகக் கொடுமையாய் வடமொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழை அதனின்றும் மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோளென்றும், இதற்காகவே என்னை இறைவன் படைத்தானென்றும், அதனால் அது நிறைவேறியே தீருமென்றும் நான் கூறினேன்.

பொதுவாராய்ச்சித் துறையிற் சேர்ந்து சில மாதமான பின் 3 அடி நீளமும் 2 1/2 அடி அகலமுமுள்ள ஒரு புதுத் தேக்குமர நிலைமேடை எனக்கு வந்து சேர்ந்தது. ஆயினும், அடிக்கடி சொன்னிகழ்த்த நேரும் பன்னிருவர் அடுத்தடுத் துள்ள ஒரு கூடத்தில் ஆராய்ச்சி செய்வதென்பது, சந்தை நடுவே ஓகத்தில் அமர்ந்திருப்பது போன்றே தோன்றிற்று. எனினும், பண்டாரகர் மணவாள ராமானுசன் போன்ற தமிழன்பர் துணைக் கண்காணகராய் வரநேரின், தமிழ் நிலையும் என் நிலைமையும் சீர்திருந்தும் என்னும் எண்ணத்தினால் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தேன்.