பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

நீக்கப்படலம்

ஐந்தாண்டாயிற்று, நான் செய்துவந்த வேலை ஒருவர்க்கும் வெளிப் படையாய்த் தெரிந்திலது. அதற்கு வாய்ப்பிருந்தும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேரா. லெ. பெ. கரு. இராமநாதரிடத்தும் துணைக் கண்காண கர் திரு. நாராயணசாமியாரிடத்தும் நான் செய்து வந்த வேலையை அடிக்கடி தெரி வித்து வந்தேன். அது போதுமென்று கருதினேன். பேரா. சேதுவினிடத்தும் என் வேலையை எழுத்து வடிவிற் காட்டச் சென்றேன். அவர் மறுநாள் வரச்சொல்லி விட்டுக் குற்றாலத்திற்குக் கிண்ணிவிட்டார்.

ஓர் உண்மையான ஆராய்ச்சியாளன் ஒரு நாளும் ஆராயாதிருக்க முடியாது. அவன் ஆராயாவிடினும் அவன் உள்ளம் ஆராயும். அதற்குக் கனவென் றும் நனவென்றும் ஊண் வேளையென்றும் உறக்க வேளையென்று மில்லை. சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் எனக்கு இயல்பாக இன்பந்தருங் கலைகள். அவ் வாராய்ச்சித் தொடர்பில், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலியில் இல்லாத ஆயிரக்கணக்கான சொற்களை இருவகை வழக்கி னின்றும் தொகுத்து வைத்தேன். ஆங்கில முறையில் தொகுத்ததினால், எளிய சொற்களும் அதில் இடம்பெற்றுள. அவற்றை நோக்காது அருஞ்சொற்களை நோக்கினால்தான், அத் தொகுப்பின் அருமை புலனாகும்.

எ-டு :பொண்டான்

=

எலிவளையின் பக்கவளை

(உலகவழக்கு)

கவைமகன் = ஈருடலொட்டிய மகவிரட்டை (twins) - இலக்கிய வழக்கு

நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அமர்த்தப் பெற்றதே செந் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்கே. அதற்கு அடிப்படையாய் வேண்டுவது இதுவரை அகரமுதலியில் இடம்பெறாத சொற்றொகுப்பே. இது நிற்றல் இருத்தல் கிடத்தல் என்னும் முந்நிலையிலும் நிகழும். வினைபற்றி எனக்கு எல்லா நாளும் வேலை நாள், விழைவுபற்றி எனக்கு எல்லா நாளும் விடுமுறை நாள். மொழிநூலின் ஆங்கிலப் பெயரும் (Philology) விழைவுநூல் என்னும் பொருளதே.

ஐந்தாம் ஆண்டிறுதியில், துணைக் கண்காணகரைக் கண்டு, (அதன் மேலும்) ஓராண்டு பொறுக்கவேண்டுமென்றும், அதற்குள் என் சொற்றொகுப்பை முடித்துத் தந்துவிடுவேனென்றும், அதற்குமேல் எனக்கு வேலை வேண்டிய தில்லையென்றும் சொன்னேன். அவர்களும் இசைந்தார்கள். மகிழ்ந்திருந்தேன்.

ஆயின், 6ஆம் கல்வியாண்டுத் தொடக்கத்தில், நான் எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறாகக் கண்காணகர் மாறினார்; புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப்பற்றுச் சிறிதுமில்லை. பேராசிரியன்மாரின் பெருமையுணரும் திறமுமில்லை. தமிழ்ப் பகைவரும் தந்நலக்காரரும் கொண்டான்மாருங் கூடித் தமிழுக்குக் கெடும்பு செய்துவிட்டனர். திடுமென்று, எனக்கு வேலை நீங்கினதாக ஓலை வந்தது.