பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

திருக்குறள்

தமிழ் மரபுரை






(இ-ரை.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு – தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லா மடநெஞ்சின் சேர்க்கையினால்; நாணும் மறந்தேன் என் உயிரினுஞ் சிறந்த நாணையும் மறந்துவிட்டேன்.

மாணாமை, மானத்தைக் காத்துக்கொள்ளாமை. மடமை, கண்டபோது நினைத்துக் காணாதபோது மறக்கவேண்டிய தவற்றைக் காணாதபோது நினைத்துக் கண்டபோது மறத்தல். நாண், பல்லாண்டு கூடியொழுகியபின்பும் அன்று கண்டாற்போல் உள்ளமும் உடம்பும் ஒடுங்குதல்.

"எஞ்ஞான்று மெங்கணவ ரெந்தோள்மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்'

(நாலடி.385)

கண்டபொழுதே புணர்ச்சி விதும்பலால் 'நாணும் மறந்தேன்' என்றாள்.

உம்மை உயர்வுசிறப்பு.

1298. எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற

முள்ளு முயிர்க்காத னெஞ்சு.

(இதுவுமது.)

(இ-ரை.) உயிர்க் காதல் நெஞ்சு உயிர்மேற் காதலையுடைய என் உள்ளம்; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி - நம்மைப் பொருட்படுத்தாது சென்றாரென்று நம் கணவரை நாமும் பொருட்படுத்தா திருப்போமாயின் பின் நமக்கு இழிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் பக்கமே நினைக்கும்.

எள்ளுதல் வாயில் மறுத்தல். அஃதாவது தலைமகள் புலவியைத் தீர்க்குமாறு தலைமகன் விடுத்த தோழி, பாங்கன், பாணன், புலவன் முதலி யோரை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தல். இளிவு, பணியாமையாலும் பிரிவாற்றாமை யாலும் அழகும் நிறையும் நாணும் இழத்தலாலும் நேர்வது. திறம், வாயில் நேர்தலும் புலவி தீர்தலும் கூடலும் முதலியன. இளிவிற் கஞ்சுதலாலும் இறந்துபடமாட்டாமையாலும் கூடக் கருதுகின்ற தென்பதாம். இறந்துபட விரும்பாமை 'உயிர்க்காதல் நெஞ்சு' என்றதால் அறியப்படும்.

1299.

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி.

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.)