பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

இலக்கணக் கட்டுரைகள் வருவனவாகவும் இருக்கும்போது, எகர ஒகரக் குறில்கட்கு மட்டும் ஏன் அதிகப்படியான புள்ளியிட்டார்கள் என்பது விளங்கவில்லை.

பிறமொழியாளர் காணாத பொருளிலக்கணம் கண்டும் இயலொடு இசை நாடகங்களை இணைத்து முத்தமிழ் புணர்த்தும், எழுநிலச் செய்யுள் யாத்தும், எழுத்தினங்கட்கு உயிர், மெய், உயிர்மெய் என்று பெயரிடுமளவு மெய்ப்பொருளறிவு விஞ்சியும், ஆம்பல் தாமரை வெள்ளம் என்று அடுக்கிய கோடியும் முந்திரி கீழ்முந்திரி இம்மி யென்று நுணுக்கிய பின்னமுங் கணித்தும், உலக முழுதும் வழங்குமாறு எழுநாட்கிழமை வகுத்தும், ஏரணமும் மறையும் இயற்றியும், முக்கரணமுங் கடந்த முழுமுதற் கடவுளைக் கண்டும், தம் தெய்வப் புலமையை வெளிப்படுத்திய குமரித் தமிழர்க்கு, ஆ ஈ ஊ போன்றே ஏ ஓ நெடில்கட்கு அதிகப்படியான வரி வடிவமைக்கும் அறிவில்லாது போயிற்றென்பது, இம்மியும் நம்பத் தக்கதன்று.

சூரசேனி மாகதி முதலிய நாட்டுப் பிராகிருத மொழியாளர், ஏகார ஓகாரங்கள் எகர ஒகரமாகக் குறுகுமுன் குமரிநாட்டினின்று வடபாற் சென்றோ, ஏன்(என்) நிலம், ஓன் (உன்-ஒன்) வீடு என்று குறில்களை நெடிலாக்கிப் பேசினதினாலோ, எகர ஒகரம் இல்லாத அல்லது வழங்காத மொழிகளைப் பேசி வந்தனர். மேலை யாசியாவினின்று கி.மு. 2000-ற்குப்பின் இந்தியாவிற்குட் புகுந்த சிறுபான்மைக் கூட்டமான வேத ஆரியரின் மொழி, வழக்கற்றுப் பெரும்பான்மைப் பழங்குடி மக்களின் பிராகிருத மொழி களுடன் கலந்துபோனதினால், அவரது வேதமொழியான இலக்கிய மொழி யும் எகர ஒகரக் குறில்கள் இல்லாததாயிற்று. மேலையாரிய மொழிகளி லெல்லாம் எகர ஒகரக் குறில்கள் தொன்றுதொட்டு வழங்கி வருவதால், வேத ஆரியரின் முன்னோர் மொழியிலும் அவை வழங்கி யிருத்தல் வேண்டும்.

நெடிலுக்குரிய அதிகப்படி குறியை எகர ஒகரக் குறில்கட்கு இட்டது போன்றே, ஏனை முந்நெடில்கட்குப் போன்று ஏகார ஓகார நெடில்கட்குச் சுழிக்குறியிடாமையும்; இயற்கைக்கு மாறாகத் தோன்றுவதால்,

ஏகார ஓகாரத் தியற்கையும் அற்றே.

என்று தொல்காப்பியர் கூறியதைப் பிற்காலத்தார் எகர ஒகரத்தியற்கையும் அற்றே என்று திரித்துவிட்டனர் என்று கொள்வதற்கும் இடமில்லை.

புள்ளி யென்பது குத்து என்றே பொருள்படுவது. புள்ளுதல் குத்துதல், அலகாற் குத்தி (கொத்தி)த் தின்பதனாலேயே பறவை புள் எனப்பட்டது.

எழுத்தாணியால் ஏட்டிற் குத்தினால் துளை விழும். அதனால், ஏட்டுப்புள்ளி யெல்லாம் சிறு சுழியாகவே யிருக்கும். இச் சுழி ஆகார ஈகாரத்திற்குப்போல் இன்று ஓகார வடிவிற்கு இறுதியில் இடப்பட்டுள்ளது. பண்டை நாளில் ஈகார வடிவும் இறுதியிற் சுழி பெற்ற இகர வடிவாகவே யிருந்தது. அதைப் புதுப்பித்தல் வேண்டும்.