பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




19

கோசர் யார்?

கடைக்கழகக் காலத்தில், கோசர் என்றொரு வகுப்பார் மூவேந்தர்க் கும் படைத்தலைவராகவும், தமிழகத்தில் ஆங்காங்கு வெவ்வேறு சிற்றரசராகவும் இருந்தமை, பழந்தமிழ் நூல்களாலும் செய்யுட்களாலும் அறியக்கிடக்கின்றது. இவ்வகுப்பாரைப்பற்றி அறிஞரிடை பல்வேறு

கருத்துகள் எழுந்துள்ளன.

காலஞ்சென்ற ரா. இராகவையங்கார், தம் 'கோசர்' என்னும் ஆராய்ச்சிச் சுவடியில், கோசராவார் காசுமீர நாட்டினின்று வேளிரையடுத்துக் கோசாம் பியைத் தலைநகராகக்கொண்ட வத்த (வத்ஸ) நாட்டு வழியாய்த் தமிழ்நாடு போந்தவர் என்றும்; வத்தம் அல்லது வச்சம் (வத்ஸம்) என்னும் வடசொற்கு இளைமைப் பொருளுண்மையாலும் அவர் கோசம் என்னும் ஓர் அரிய சூள் முறையைக் கையாண்டதினாலும், இளங்கோசர் என்னப்பட் டிருக்கலாமென்றும் கோசர் என்னும் பெயருக்குக் கோசம் என்னும் சூள்முறையன்றி, கோசம் (கோசாம்பி) என்னும் நகர்ப்பெயரும், குசர் என்னும் ஆட்டுப்பெயரும், கோசம் (திரவியம்) என்னும் செல்வப்பெயரும், காரணமாயிருக்கலாமென்றும் கோசர் முதற்கண் கொங்கில் வதிந்து பின்பு குடகிற் குடியேறியவர் என்றும்; அகுதை, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலிய குறுநில மன்னர் கோசர் என்றும்; இது போதுள்ள கைக்கோளரும் செங்குந்தரும் கோசர் மரபினர் என்றும்; பிறவும்; தம் ஆராய்ச்சி முடிபாகக் கூறியுள்ளார். இவற்றுள் ஒன்றிரண்டேயன்றி

எல்லாம் உண்மையல்ல.

ஒருசார் அறிஞர், கோசரை வம்பமோரியர் படைக்கு முன்னணியாக வந்த வடுகராகவுங் கொள்வர். இதுவும் உண்மை அன்று.

கோசர் காசுமீரத்தினின்றோ வத்தநாட்டினின்றோ வந்தவர் என்பதற்கு ஒருவகை வரலாற்றுச்சான்றுமில்லை. அவர் தொன்று தொட்டுத் தமிழ் நாட்டிற் பல்வேறிடங்களில் வாழ்ந்தவரென்பதே, பண்டைத் தமிழ் இலக்கியத்தால் தெரியவருகின்றது. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மாறானதொன்றும் அவரைப்பற்றிய வண்ணனைகளிற் காணப்படவில்லை. “பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் தலைவனாகக்