பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் தனித்தியங்குமா?

21

குச்சு என்பதனொடு இப்பின்னொட்டைச் சேர்ப்பின், bacterium என்பதற்கு நேரான குச்சில் என்னும் தமிழ்ச்சொல் ஆம். சிறு வீட்டைக் குறிக்கும் குச்சில் என்பது குற்றில் என்பதன் கொச்சைத் திரிபு. சிலபெயர்கள் பன்மடியாகு பெயர்களாயுள்ளன.

Mail என்னும் ஆங்கிலச்சொல் பை என்னும் அடிப்படைப் பொருளது. அது பின்பு, முறையே, பைக்குள் இடும் கடிதங்களையும் அவற்றைக் கொண்டு செல்லும் புகை வண்டியையும் குறித்தது. ஆகவே, Mail என்பதை அஞ்சல் அல்லது அஞ்சலை என்று குறிக்கலாம்.

எல்லாச் சொற்களையும் வேர்ப்பொருள் பற்றியே மொழி பெயர்க்க வேண்டியதில்லை. பொருள்களின் சிறப்பியல்பு நோக்கி அதற்கேற்ப ஒரு பெயரிடலாம். இம்முறையிலேயே, train என்பதைப் புகைவிடும் சிறப்பியல்பு பற்றிப் புகை வண்டி எனக் குறித்தனர் தமிழ்ப் பொதுமக்கள். Train என்னும் ஆங்கிலச் சொல் இழு (Draw) என்று பொருள்படும் trab என்னும் இலத்தீன் முதனிலையினின்று திரிந்தது. Cycle மிதி வண்டி என்பர் நெல்லை நாட்டார். அதை ஈருருளி என்னத் தேவையில்லை.

பண்டை நாட்களில் அயல் நாடுகளினின்று வந்த எல்லாப் பொருள் கட்கும், அவற்றின் சிறப்பியல்பு பற்றியத் தூய தென் சொற் பெயர்களை இட்டிருக்கின்றனர். பண்பட்ட பழந் தமிழ்ப் பொதுமக்கள். கரும்பு சாலித் தீவினின்றும், புகையிலையும் உருளைக் கிழங்கும் அமெரிக்க நாட்டினின்றும், வான்கோழி துருக்கி நாட்டினின்றும் வந்தவை. அமெரிக்கத் தன்னாட்டுச் சொற்களின் திரிபான tabaco (E. tobacco), Patata ( E. potato) என்னும் இசுப்பானியச் (Spanish) சொற்களைத் தமிழ் ஏற்றுக் கொள்ள வில்லை. இம்மொழியுணர்ச்சி பிற்காலத்தில் ஆரியத்தாற்கெட்டது.

சில சொற்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அடிப்பொருளும் வழிப் பொருளும் ஒத்துள்ளன. Pen என்னும் ஆங்கிலச் சொல், தூவு (feather) என்று பொருள்படும் Penna என்னும் இலத்தீன் சொற்றிரிபு. தூவல் என்னும் தமிழ்ச் சொல்லும் அத்தகையதே.

ஆங்கிலச் சொற்களை மொழி பெயர்க்கும்போது வண்ணனை (de- scriptive) முறையைக் கையாளக்கூடாது. Collector என்பதைத் தண்டலாளர் என்றே மொழி பெயர்த்தல் வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் என்று குறிப்பின், Collector என்பதையும் District Administrative Head அல்லது District Chief Administrator என்று மாற்றல் வேண்டும். அது பொருந்தாமை காண்க. காட்சியும் கருத்துமாகிய இருவகைப் பொருள் கட்கும், சொற்கள் ஒரு மருங்கு காரணக்குறியாய் இருந்தாற் போதும்.

இத்தகைய முறைகளைக் கையாளின், எல்லா ஆங்கிலக் குறியீடு களையும் தமிழில் மொழி பெயர்த்து விடலாம். ஆங்கிலக் குறியீடுக ளெல்லாம் மிக எளிய முறையில் அமைந்துள்ளன. தமிழர்க்கு வேண்டுவது தமிழ்ப்பற்று ஒன்றே.