பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாயிரப் பெயர்கள்

61

பொருள் சிறப்புப் பாயிரத்திற்கும் உரியன. பதிகம் என்னும் பெயர் பத்து (பது) என்னும் சொல்லினின்று தோன்றியிருத்தலின்; ஆக்கியோன் பெயரே என்னும் நூற்பாவிற் குறிக்கப்பட்ட எண் பொருளும், காலங்களனே என்னும் நூற்பாவிற் குறிக்கப்பட்ட முப்பொருளும் ஆகிய பதினொரு பொருளைத் தருவதென்று உரையுரைப்பதே பொருத்தமானதாம். ஒன்று பத்தை நோக்கச் சிறிதாதலின் பதினொன்றும் பத்தாகவே கொள்ளப் பெறும் (ஆங்கிலத்தில் பதின் மூன்று - Baker's dozen எனப்படுதல் போல) இங்ஙனம் பதிகம் என்னும் சொல் சொல்லாலும் பொருளாலும் தூய தமிழாயிருக்கவும், அது ப்ரதீக என்னும் வடசொல்லின் திரிபாக வட மொழியாளர் கூறுவதும், அதைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி பின்பற்றியிருப்பதும், குறும்புத்தனமும் பொறுப்பற்ற செயலுமாகும். உண்மையில், பதிகம் என்னும் தென் சொல்லே ப்ரதீக என்னும் வடசொல்லாகத் திரிந்துள்ளது. பதின் செய்யுட்டொகுதியை குறிக்கும் பதிகம் என்னும் தென் சொல்லைப் பத்யம் (செய்யுள்) என்னும் வடசொல்லோடிணைக்க விரும்புவார் வேறு என்தான் சொல்லார். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் உள்ள சிறப்புப் பாயிரங்கள் பதிகம் எனப்பெயர் பெற்றுள்ளன.

3. அணிந்துரை

இது மறைமலையடிகள் மதிப்புரையும் முன்னுரையும் போல் ஒரு நூலுக்கு அணி (அழகு) செய்து நிற்பது.

4. நூன்முகம்

இது நூலுக்கு முகம் போல்வது; உரைநடை, செய்யுள் ஆகிய இரு வடிவிற்கும் பொதுவானது.

5. புறவுரை

இது நூலுக்குப் புறமாக உரைக்கப்படுவது. புறம் பின்பு, இறுதி. தொல்காப்பிய இறுதியில் உரைக்கப்பட்டுள்ள நூலுரைமரபு பறவுரையாகும். சிலர் நூலுரை மரபு செய்யுளியலிலேயே கூறப்பட்டு விட்டதனால் (1421 - 1430) மரபியலில் உள்ளது பிற்செருகல் என்பர் (1590 - 1610) அகத் திணையியலிற் கூறிய உவமையிலக்கணச் சுருக்கத்தையே (992-995). பின்னர் உவமவியலில் தொல்காப்பியர் விரித்துரைப்பதால் (1222 1258) மரபியலின் இறுதியில் விரித்துரைக்கப்பெறும் நூலுரைமரபு பிற்செருக லெனக் கொள்ளப்படாதென்க. (புறவுரை என்பது, மேலை நாடக நூற்களிற் கூறப்படும் Epilogue என்பதை ஒரு புடையொத்ததாகும்.)

பதிற்றுப்பத்தின் உரைபெறு கட்டுரைகள் இட வகையால்

புறவுரையாக அமைந்துள்ளன.