பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

தனிச்சொற்கள்

1. உம்பர்

தமிழ் உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மை மேன்மேலும் உறுதிப்பட்டு வருகின்றது. வரலாற் றடிப்படையில் தமிழை நடுநிலையாய் ஆய்ந்தார்க்கு, இவ் வுண்மை வெள்ளிடை மலையாய் விளங்கித் தோன்றும்.

தமிழ்நாட்டு மேனாள் ஆள்நர் மாண்புமிகு கே.கே.சா. குசராத்தியரா யிருந்தும், தமிழை நடுநிலையாய் ஆய்ந்ததனால், அது சமற்கிருதத்திற்கு மூலமென்னும் உண்மையைத் தெள்ளத் தெளியக் கண்டு, உலகறிய வெளிப்படையாய் உரைத்ததுமன்றி, கட்டுரையாக வரைந்து வெளியிட்டும் உள்ளார்.

இந்தியரு மல்லாத நெடுஞ்சேண் வெளிநாட்டாரான கால்டுவெலார், தொல்காப்பியமும் கடைக்கழகப் பனுவல்களும் தமிழ்ப் பெரும்புலவர்க்குந் தெரியாது மறைந்தும், தமிழன் பிறந்தகம் குமரிநாடென்னுங் கருத்து ஒருவருள்ளத்திலும் தோன்ற வழியில்லாதும், இருந்த காலத்தில், மறைமலையடிகள் போலும் வழிகாட்டியார் ஒருவருமின்றித் தாமே தமியராய்த் தமிழைக் கற்றாய்ந்தாரேனும், நடுநிலையாக ஆய்ந்ததனால், தமிழின் உலக முதன்மையைக் கண்டு, “திரவிடச் சுட்டுகள் சமற்கிருதத்தினின்று கடன் கொள்ளப்பட்டவை யல்ல. அதற்கு மாறாக, அவை, சமற்கிருதச் சுட்டுகட்கும் அதனொடு சேர்ந்த வேறுபல இந்திய - ஐரோப்பியக் குடும்ப மொழிச் சுட்டுகட்கும் மூலமான, யாப்பேத்தியச் (Japhetic) சுட்டடிகளை ஒத்துள்ளன” என்று திண்ணமுறக் கூறியுள்ளார். (திரவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், சென்னைப்பதிப்பு, ப. 422)