பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

ம. சந்த, க. சந்தெ, து. சந்தெ.

இச் சொல் வடமொழியில் இல்லை.

சந்தைக்காரன், சந்தைக்கூட்டம், சந்தைகூட்டுதல், சந்தைச் சரக்கு, சந்தைமடம், சந்தைமுதல், சந்தையிரைச்சல், சந்தை யேற்றுதல், சந்தைவிலை, சந்தைவெளி என்பன தொன்றுதொட்டு வழங்கிவருஞ் சொற்கள்.

இந்த மடம் போனாற் சந்தை மடம்.

சந்தைக்கு வந்தவர்கள் என்றைக்குந்துணையா?

சந்தையில் அடிபட்டவனுக்குச் சான்றவன் யார்?

சந்தையில் விலைபோகாதது எந்த வூரிலும் விலைபோகாது. சரக்கு மலிந்தாற் சந்தைக்கு வரும்.

இவை பழமொழிகள்.

வடமொழியாளர் சந்தி யென்னுஞ் சொல்லை ஸம் + தி (sam + dhi) என்று பிரித்து, ஸம் + தா, ( sam + dhā) என்னுங் கூட்டுச் சொல்லினின்று திரிப்பர். ஸம் = உடன், கூட, together. தா (dhā) = டு, வை, to put. ஸம்தா (samdhā), to put together, join என்பது அவர் காட்டும் மூலம்.

தமிழில், உம் - உந்து - அந்து - அந்தி, அந்து -சந்து - சந்தி, சந்து - சந்தை என்றிவ்வாறு ஒரே சொல்லினின்று சொற்கள் படிமுறையாய்த் திரிந்துள்ளன.

வை தொன்றுதொட்டும் தொடக்கந்தொட்டும் வழங்கி வருவன. சந்தை யென்னுஞ் சொல் வடமொழியிலின்மையும், இவை தூய தென்சொல்லே யென்பதை வலியுறுத்தும்.

தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழி யென்னும் அடிப்படை யுண்மையை உள்ளத் திருத்தின், மேற்கூறியதை உணர்வதில் இடர்ப்பாடேது மிராது.

“கைத்தலந் தன்னிற் செம்பொன் வளையல் கலகலெனச்

சத்தமொ லித்திட நூபுரப் பாதச் சதங்கைகொஞ்சத்

தத்திமி யென்றே நடஞ்செய் சம்பீசர் சந்நிதிப்பெண்

செத்த குரங்கைத் தலைமேற் சுமந்து திரிந்தனளே”

என்பது, முன்பு ஈற்றடி மட்டும் வரைந்து விடப்பட்ட பாட்டாகும்.

“பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும் பேயும்”

"போமிராச் சூழ்சோலை பொருகொண்டைப் பொம்மி கையில்”

என்னும் தனிப்பாட்டடிகளுங் கவனிக்கத் தக்கன.