பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

மதிப்புரை மறுப்பு

ஈராண்டுகட்குமுன் என் ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை'ப் பற்றி 'இந்து’த் தாளில் ஒரு மருங்கு போற்றியும் ஒரு மருங்கு தூற்றியும் ஒரு மதிப்புரை வந்திருந்தது. அதை எனக்கு ஒரு நண்பர் கொண்டுவந்து காட்டினார். அதன் பின்னர்த்தான், 'சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்' ஒரு படி ‘இந்து’ச் செய்தித் தாட்குத் திருவாளர் வ. சுப்பையாப் பிள்ளையவர் களால் மதிப்புரைக்காக விடுக்கப்பட்டிருத்தல் வேண்டும் என ஊகிப்பால் அறிய நேர்ந்தது. எனக்குச் சொல்லாமல் விடுத்ததினால் அதை முன்னறிய வில்லை. என்னைக் கேட்டிருந்தால் நான் தடுத்திருப்பேன். ஏனெனில், விளைவு முன்தெரிந்தது என்பது மட்டுமன்று, என் ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை' ஆயும் ஆற்றலுடையார் 'இந்து' நிலையத்திலாவது அந் நிலையச் சார்பிலாவது இல்லை என்பதே என் கருத்து.

மதிப்புரையைப் படித்தவுடன் “திருவாளர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தங்கள் கொள்கைக்குச் சார்பான அல்லது மாறல்லாத பகுதியைப் போற்றியும் மாறான பகுதியைத் தூற்றியும் வரைந்துள்ளார்கள்,” என்று என் நண்பரிடம் சொன்னேன். அவர் உடனே ஒரு மறுப்புரை விடுக்க வேண்டும்” என்றார். நான் அம் மதிப்புரையைப் பொருட்படுத்தாததினால் அவர் விருப்பிற்கிசையாது வாளா இருந்துவிட்டேன்.

66

இன்று, என் ‘பாணர் கைவழி' மதிப்புரை மறுப்பைப் பார்த்தவுடன், என் நண்பர் மீண்டும் என்னிடம் ஓடிவந்து, “ஐயா! ஏனையர் இயற்றிய நூல்பற்றி யெழுந்த மதிப்புரைக்கு மட்டும் மறுப்புரை விடுத்தீர்களே! ஏன் தாங்கள் இயற்றிய 'சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்' மதிப்புரைக்கு இன்னும் மறுப்புரை விடுக்கவில்லை? இதனால், திருவாளர் சுப்பிரமணிய சாத்திரியா ரவர்கள் வரைந்த மதிப்புரை சரியானதே யென்றும், தங்கட்கு அதை மறுக்கும் மதுகை யில்லை என்றும் அல்லவா படும்?” என்று எனக்கு மான வுணர்ச்சி தோன்றுமாறு ஒரு முறை கூறியதோடமையாது திரும்பத் திரும்பச் சொல்லி வற்புறுத்தியதின் பயனாக, இம் மறுப்புரை வருகின்ற தென்க.