பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 48.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?

51


பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா?

51

1. "உயிருள்ள மொழிகள் வழக்கில் இருக்கும்பொழுது கொடுக்கல் வாங்கல் இருக்கவே செய்யும்.”

உயிரற்ற வேத ஆரியமும் உயிரில்லாத சமற்கிருதமும், அடிநாள் முதல் கொடுக்கல் வாங்கல் செய்து வந்திருக்கின்றனவே!

2. "பல பொருள்கள் ஒருமொழி பேசுபவரிடையே சிறந்திருக்கும். அவற்றை மற்றொரு மொழி பேசுவோர் பயன்படுத்தப் புகுவது உலக இயற்கை.*

இக் கூற்று மிகப் பொருத்தமானது. என் கருத்தும் இதுவே. பேராசிரியர், பல சொற்கள் என்று குறியாமல் "பல பொருள்கள்" என்று குறித்திருப்பது மிகவும் போற்றத்தக்கதாம். தமிழ் பிறமொழிகளிலுள்ள சொற்களையன்றிக் கருத்துகளையே தழுவும். இதை 'Intussusception' என்பர் ஆங்கிலர்.

3. "நம்முடைய மாம்பழமும் மாங்காயும் ஆங்கிலேயருக்குச் சுவை மிகத் தந்தன. ஆகையால், மாங்காய் என்பது 'mango' என்று பல நூற் றாண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் தமிழ்நாட்டுக்கு வந்ததிலிருந்தே ஆங்கில மொழியில் புகுந்துள்ளது.

இது சரிதான், ஆயின், மாங்காய் ஆங்கிலேயருக்குச் சவைமிகத் தந்ததா என்பது தெரியவில்லை. வடார்க்காடு மேலைப் பகுதியிலுள்ள ஆம்பூர் வட்டத்தில், மா என்னும் பெயர் மாங்காய் என்னும் வடிவிலேயே வழங்குகின்றது. காயைக் குறியாதவிடத் தெல்லாம், மாங்காய்ப் பழம், மாங்காய்த் தோப்பு, மாங்காய் மரம், மாங்காயிலை, மாங்காய்ப்பிஞ்சு என, மாங்காய் என்பதே நிலைமொழியாய் வழங்குகின்றது. ஆம்பூர் சென் னைக்கு அண்மையிலிருப்பதால், கிழக்கிந்தியக் குழும்பார் வந்திருந்த தொடக்கத்தில். மா என்னும் பெயர் மாங்காய் (mango) என்னும் வடிவில் ஆங்கிலத்திற் புகுந்திருக்கலாம்.

4. “அப்படியே ஆங்கிலேயர் வழியாக மோட்டார்க் கார்' நம் நாட்டுக்கு வந்தது. அதனோடு 'கார்' என்ற சொல்லும் தமிழுக்குள் நுழைந்தது. எனவே கொடுத்தும் வாங்கியும் வந்தது மக்கள் பண்பாட்டு வளர்ச்சியையே காட்டுகிறது."

இயங்கி (Motor car) நம் நாட்டிற்கு வந்தது மெய்தான். ஆயின் 'கார்' என்ற சொல் அப் பொருளில் தமிழுக்குள் நுழையவில்லை. மொழியுணர்ச்சி யும் அறிவுமில்லாத மக்கள் வாய்க்குள் மட்டும் நுழைந்தது. அது தமிழுக்குள் நுழைந்ததாகாது. மக்கள் வாய்க்குள் நுழைந்ததற்கும் வையாபுரி வகையார் ஆட்சியில் அன்று தமிழிருந்ததே கரணியம். செந்தமிழ்க் காவலர் அன்று இருந்திருந்தால், ஆண்டுதோறும் அருந்தமிழ் நூல்கள் ஆடிப் பெருக்கில் அமிழ்ந்திருக்குமோ? 'கார்' என்னும் ஆங்கிலச் சொல்லும் இயங்கியையும் தேரையையும் வேறுபாடின்றிக் குறிப்பதால், அத்துணைச் சிறந்த சொல்லுமன்று.