பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

உண்மைத் தமிழர் கடமை

செந்தமிழ்ச் சிறப்பு

வருகின்ற மதுரை உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டிற்கு உண்மைத் தமிழர் கடல்போல் திரண்டு வருக.

இம் மாநாடு இதுவரை நடந்தவை போன்றதன்று. அயல்நாட்டறிஞர் ஆயிரவர் வரலாம். தமிழ் மாந்தன் தோன்றிய குமரிநாட்டு உலக முதன்மொழி யென்னும் உண்மை, பகைவர் மனத்திலும் பசுமரத்தாணிபோற் பதியுமாறு, திரைப்பட வாயிலாகக் காட்சியளவையிற் காட்டப்பட விருக்கின்றது. தமிழின் தொன்மை முன்மை தென்மை முதலிய தன்மை களையும், தமிழ் நாகரிகத்தின் தனிச் சிறப்பையும், பண்டைத் தமிழரின் பல்வகைப் பெருமையையும் அணிவகுத்துக் காட்டிவரும் அட்டோலக்க வூர்வலம் ஒன்று ஆரவாரமாக நிகழும். நிலையான ஓர் அருங்காட்சியகமும் கண்கவர் கவினோடமையும். இற்றைத் தமிழகத்தில் வரலாற்று முறையில் தலைசிறந்த பண்டைப் பாண்டியன் தலைநகராகிய மதுரை மாநகரும், புதியதோர் கோலங்கொள்ளும். கடைக்கழகம் போன்ற ஒரு புலவர் கழகமும் நிறுவப்பெறும்.

தமிழன் பிறந்தகம் மாந்தன் பிறந்தகமாகிய குமரிநாடே யென்னும் அடிப்படையுண்மை, இம் மாநாட்டில் அறுதியும் இறுதியும் உறுதியுமாக முடிபுறல் வேண்டும்.

அடுத்த மாநாடு 1985-ல் வடஆப்பிரிக்கச் செனகெல் (Senegal) நாட்டில், அதன் குடியரசு தலைவர் மேன்மை தங்கிய (இ)லியபோல்டு செங்கோர் தலைமையில் நடைபெறல் வேண்டும். அதற்குத் தமிழ்நாட்டுப் புலவர் குழுவை முதலமைச்சரே நடத்திச் செல்லல் வேண்டும். அம் மாநாட்டில், தமிழே உலக முதன்மொழியென்றும், ஆரியத்திற்கு அடிமணை யென்றும், இந்திய நாகரிகம் தமிழரதென்றும், யாம்(பிறரும் யானும்) ஐயந்திரிபற நாட்டுவேம். அதை இந்தியா, செருமனி, பிரெஞ்சு, இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய பன்னாட்டு ஆரியப் புலவரும் பட்டிமன்றத்தில் எதிர்க்கலாம். இறைவனருளால், அப் போலி யெதிர்ப்பை யெல்லாம் தவிடுபொடியாகத் தகர்த்தெறிவேம்.

பேரன் சேயானை அதாவது பாட்டனைப் பெற்ற பூட்டனைப் பெற்றான் என்பதுபோல், ஆரியத்தினின்று தமிழ் பிறந்த தென்பதும்; முட்செடியில் முந்திரிப் பழம் பழுத்தது என்பதுபோல், ஆரியச் சிறுதெய்வ வணக்கத்தினின்று சிவதிருமாற் பெருந்தேவ மதங்கள் திரிந்தன வென்பதும்; மரப்பாவை ஓர் உயிர் மகவை ஈன்றது என்பதுபோல், பாணினீயத்தினின்று தொல்காப்பியந் தோன்றிற் றென்பதும், அன்றோ டொழிதல் வேண்டும்.

தென்மொழி வடமொழிகளின் முன்மை பின்மையையும் மென்மை வன்மையையும் நாட்ட, அவற்றின் தோற்றக் காலமும் நெடுங்கணக்குமே போதிய சான்றாகும்.