பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

செந்தமிழ்ச் சிறப்பு

அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவேலெறிந்து வான்பகை கொண்டவன், நெடியோனுக்கு முந்திய வடிம்பலம்ப நின்ற பாண்டியன். நெடியோன் முந்நீர்க்கு விழாக் கொண்டாடி அதனொடு நட்புப் பூண்டவன்.

குமரிக்கண்டத்தின் தென்பகுதி மூழ்கியபின், வடபகுதியில் நெய்தல் நிலத்தில், கதவம் (கபாடம்) அல்லது புதவம் அல்லது அலைவாய் என்று பெயர் பெற்ற இரண்டாம் பாண்டியத் தலைநகர் தோன்றிற்று. பின்பு அதையுங் கடல் கொண்டது. அஃது இரண்டாம் கடல்கோள்.

அதற்குத் தப்பிய பாண்டியன், தன்போல் எஞ்சியிருந்த தன் குடிகளைச் சோழநாட்டிலும் சேர நாட்டிலும் ஒவ்வொரு பகுதியைக் கைப்பற்றிக் குடியிருத்தினான். இதனையே,

மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்

டிடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்”

என்று முல்லைக்கலி கூறும்.

(104: 1-4)

'சோழநாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேர மாநாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னும் இவற்றை, இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன்” என்று அடியார்க்குநல்லார் உரைத்ததும் இதுபற்றியதே.

இங்ஙனம், இரு கடல்கோள்களால் குமரிக்கண்டத்தின் தென்கோடி யிலிருந்த பஃறுளியாற்றிற்கும் வடகோடியிலிருந்த குமரியாற்றிற்கும் இடைப்பட்ட நில நீட்சியை “எழுநூற்றுக் காவதவாறு” (ஏறத்தாழ ஈராயிரம் கல்) என்றும், அந் நிலப்பரப்புப் பகுதிகளை, “ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ் குறும்பாலை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும்” என்றும், அடியார்க்கு நல்லார் உரைத்திருப்பது, கடுகளவுங் கட்டுச் செய்தியாயிருக்க முடியாது.

அருச்சுனன் தெற்கே திருநீராட்டிற்கு வந்த பாரதக் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட தொல்காப்பியர் காலத்திலும் (கி.மு. ஏழாம் நூற்றாண்டு) பஃறுளி மதுரை நோக்கி, வடமதுரையென வழங்கிய வைகை மதுரை தோன்ற வில்லை, குமரியாறு ஓடிற்று. பின்னர் அதுவும் கடலுள் மூழ்கிற்று. அதன் பின்னரே, “தொடியோள் பௌவம்” என்று இளங்கோவடிகள் குறிக்கவும், “தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறுங் கடல்கொண் டொழிதலால்” என்று அடியார்க்குநல்லார் உரைக்கவும் நேர்ந்தது. குமரியாற்றைக் கடல்கொண்டது மூன்றாங் கடல்கோள்.

மணிமேகலை காலத்திற் புகார் கடலுட் புகுந்தது நாலாங் கடல்கோள். இறையனா ரகப்பொரு ளுரையிலுள்ள முக்கழக வரலாறு, முதலிரு கடல்கோள்களைக் குறிக்கின்றது. இது நம்பத்தக்க செய்தியே.