பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

8. கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்

27

கால்டுவெல் கண்காணியார், தமிழை ஆழ்ந்து கற்றுத் தமிழுக்கு அரும் பெருந்தொண்டு செய்த மேலையருள் தலைசிறந்த வராயிருந்தும் அவர்தம் அயன்மையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழிலக்கிய மனைத்தும் அழிக்கப்பட்டுப் போனமை யாலும், இற்றைத் தமிழர் எல்லா வகையிலும் பிராமணருக்குக் கீழ்ப்பட்டிருப்பதனாலும், தொல்காப்பியப் பயிற்சியும் கழக (சங்க) நூற் கல்வியும் தனித் தமிழுணர்ச்சியும் குமரிக்கண்டக் கொள் கையும் அவர் காலத்தின் மையாலும், தமிழரே வடமொழியைத் தேவ மொழியென நம்பிப் பல தென்சொற்கு வடசொன்மூலம் காட்டி யமையாலும், தமிழையும் தமிழரையும்பற்றிய பல வுண்மைகளை அறியவியலாது போயினர். ஆதலால், தம் ஒப்பியலிலக்கணத்தில் பலவிடங்களில் மிகத் தவறான செய்திகளைக் கூறியுள்ளனர்.

அவையாவன:

(1) சேரர், சோழர், பாண்டியர் என்னும் பெயர்கள் முத்தமிழ் நாட்டுக் குடிகளின் பெயர்கள் என்பது.

(2) தமிழ் நாகரிகம் கொற்கையில் தொடங்கிற்று என்பது.

(3) தமிழரை (அல்லது திரவிடரை) உயர்நாகரிகப் படுத்தியவர் ஆரியர். ஆரியர் வருகைக்கு முன், வீடு (மோட்சம்), அளறு (நரகம்), புலம்பன் (ஆன்மா), கரிசு (பாவம்) என்பவற்றைப்பற்றித் தமிழருக்கு ஏதேனுங் கருத்திருந்ததாகத் தெரியவில்லை. வழக்கறிஞரும் நடுவரும் அவர்கட்கில்லை. அறிவனும் (புதனும்) காரியும் (சனியும்) தவிர, மற்றப் பழங்காலத்தாருக்குப் பொதுவாகத் தெரிந்திருந்த கோள்களை யெல்லாம் அவர் அறிந்திருந்தனர் ஆயிரத்திற்குமேல் அவர் கட்கு எண்ணத்தெரியாது, மருத்துவ நூலும் மருத்துவரும் மாநகரும் வெளிநாட்டு வணிகமும் அவர்கட்கில்லை. இலங்கை யைத் தவிர, வேறெந்தக் கடற்கப்பாலை நாட்டோடும் அவர்கட்குப் பழக்கமில்லை. தீவு அல்லது கண்டம் என்னும் கருத்தைத் தெரி விக்கக் கூடிய சொல் அவர்கட்கில்லை. படிமைக்கலை, கட்டடக் கலை, வானநூல், கணியம், பட்டாங்கு நூல் துறைகள், இலக்கணம் ஆகியவற்றைப்பற்றி அவர் கட்குத் தெரியாது. அவர்கள் அகக்கரண வளர்ச்சியடையாதிருந்த தினால், மனம், நினைவு, மனச்சான்று, வெள்வு(will) ஆகியவற்றைக் குறிக்க அவர்கட்குச் சொல்லில்லை என்பது.

(4) தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது. தமிழர் வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை 5. இப் பகுதியில் வந்துள்ள தனித்தமிழ்ச் சொற்கள் ஆசிரியன் குறித்தவை. ஆதன், உறவி என்பனவும் புலம்பனைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாம்.

5