பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

தமிழ் வரலாறு

கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே, குமரிலபட்டர் ஆந்திர திராவிட பாஷா என்று தெலுங்கைத் தமிழினின்று பிரித்துக் கூறிவிட்டார். கன்னடமும் மலையாளமும் அதன்பின்பே தமிழி னின்று பிரிந்தன. தமிழ் நாடும் ஆந்திர மைசூர் கேரளமாகிய முத் திரவிட நாடுகளும் அண்மையில்தான் பிரிந்து போயின. அவை மீளவும் ஒன்றுசேரும் நிலைமையிருப்பின், முன்னர்ப் பிரிந்தே போயிரா. மேலும்.

“கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையா ளழுந்துளுவும் ன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்

என்று பேரா. சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியது, பழந்தமிழைப் பொறுத்தவரையில் உயர்வுநவிற்சியா யிராது உண்மை நவிற்சியா யிருப்பதால், தமிழையும் அதன் இன மொழிகளையும் வேறு பிரித்துக் கூறுதற்கு மற்றுமொரு கரணியமுள்ளது. பழந்தமிழுக்கும் இற்றைத் தமிழுக்குமுள்ள வேறுபாடு மிகச் சிறிதே. இலத்தீனுக்கும் இத்தாலியம், பிரெஞ்சியம், இசுபானியம், போர்த்துக்கீசியம் முதலிய மொழிகட்கும் இடைப்பட்ட உறவே, தமிழுக்கும் தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகட்கும் இடைப்பட்ட தாகும்.

தமிழல்லாத ஒரு மொழி திரவிடத்தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததேயில்லை. மொழித்துறைக்குச் சொன்னதே இனத்துறைக்கும். “திரவிட முன்னையர் (Pre-Dravidians”) என்றோ, மூலத்திரவிடர் (Protp-Dravidians) என்றோ, திரவிடர் (Dravidians) என்றோ வேறுபாடிருந்ததாக நமக்குத் தோன்றவில்லை. இவர்க ளல்லாம் புதுக்கற்காலத்தினின்றும் அதற்கு முன்பிருந்தும் வந்த மக்களின் நேர்வழித் தோன்றிய ஓரினத்தாரே.” என்று இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருத்தலையும் காண்க. (Pre-Historic South India, p. 246)

10. தமிழ் என்னும் பெயர் வரலாறு

தமிழ் குமரிக்கண்டத்தில்தானே தோன்றிய மொழியாத லானும், ஆரியர் வரும்வரை வேற்றுமொழி யொன்றும் தென்னாட் டில் எவ்வகையிலேனும் வழங்காமையானும், தமிழவணிகர் மொழிபெயர் நாடு செல்லும்வரை அல்லது அயலாரொடு அரசியல் அல்லது வணிகத் தொடர்பு கொள்ளும் வரை, மொழி அல்லது பேச்சு என்னும் பொதுப் பெயர் தவிர யாதொரு சிறப்புப்பெயரும் தமிழுக்கு வழங்கியிருக்க முடியாது.

தமிழ்மொழியின் சிறப்புப் பெயர், தமிழ் (தமிழம்), திரவிடம் என்னும் இருவடிவில் காணப்படுகின்றது. இவ் விரண்டும் வெவ்வேறு சொற்போல் தோன்றினும் உண்மையில் ஒரே சொல்லின் இருவேறு வடிவங்களாகும். இவற்றுள் முன்னையது தமிழ் என்பதே. இதற்குச் சான்றுகளாவன: