பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

பேரன்பரீர்,

179

கடிதம் : 7

ஆ. 1135, 2ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு, வ.ஆ. மாவட்டம்,

27.7.71

வணக்கம். தங்கள் அன்பளிப்புக் காசோலை யுடனிட்ட முடங்கலும் அடுத்த அட்டையும் வந்து சேர்ந்தன.

பா.வே. மாணிக்க நாயகர் எனக்கு மூத்த தலைமுறையர். ஆதலால், அவர்கள் எழுதிய தொல்காப்பிய ஆராய்ச்சியும் அஞ்ஞானத்தின் வழக்கீடும் நான் வாங்கவில்லை. தஞ்சை உமாமகேசுவரம் பிள்ளையவர்களின் உறவினரைக் கேட்டுப்

பார்க்க.

வேர்ச் சொற்கட்டுரையும் ‘நான் கண்ட தமிழ்ப் பெரும் புலவர்’ வரிசையில் மூவர் வரலாற்றுப் பகுதிகளும் இன்று பதிவஞ்சலில் விடுத்துள்ளேன். அடிகளைப்பற்றி எழுதவில்லை. அவர்களைப்பற்றி ஏற்கெனவே விரிவான வரலாறுகள் வெளி வந்துள்ளன. அவர்கள் மாபெரும் புலவராதலால் அவர்கள் வரலாறு பிறரதுபோல் ஓரிரு பக்கத்திற்குள் அடங்காது. பிறர் எழுதாத செய்திகளைத் தொகுத்து என் இறுதிக் காலத்தில் ஒரு தனிப் பொத்தகமாக எழுதவிருக்கின்றேன்.

புலவர் வரலாற்றுப் பகுதிகளைத் தாளின் இருபுறமும் எழுதியுள்ளேன். ஒரே புறம் எழுதின் தாட் செலவாவதொடு அஞ்சற் கட்டணமும் மிகும். அச்சு அடுக்கிற்கு எளிதாக இருக்கு மாறு முற்படப் படியெடுப்பித்துக் கொள்க.

இன்று, செ. சொ. பி. அகரமுதலித் தொகுப்பில் ஈடு பட்டிருப்பதால் வேறொன்றிலும் கவனஞ் செலுத்தற் கில்லை. மாதந்தோறும் ஒரு கட்டுரை வரைவதே பெரிது. எனினும் இத்தமிழாண்டிறுதிக்குள் உயிர்மெய்முதல் வேர்ச் சொற்கள் முடிந்துவிடும். அதன் பின் நூலாக வெளியிடலாம். இன்று எழுதி வருபவை பெருவேர்ச் சொற்களே. சிறுவேர்ச் சொற்கள் நூற்றுக் கணக்கின.

சென்னைப் ப.க.க. அகரமுதலித்தாள் அப்பளம் போன்ற தாதலால் அதைக் கட்டடஞ் செய்ய முடியாது. பர்.சஞ்சீவி, பேரா. நிலவழகனார் (இராமச்சந்திரனார்) பெருஞ்சித்திரனார்,