பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

தமிழர் வரலாறு

அவருடைய எலும்பொடும் நரம்பொடும் மூளையொடுங் குருதி யொடும் இரண்டறக் கலந்து ஊறிப் போனதினாலும்; வலிமை மிக்க மாபெருந் தமிழ இனம் நூற்றுக்கணக்கான பிறவிக் குலக் கூண்டுகளுள் வெவ்வேறு விலங்கினம்போல் அடைக்கப்பட்டுள்ளமை யாலும்; அதனாற் பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரம் ஆகிய மூவகக்கரண வாற்றல்களையும் நீண்ட நாட்கு முன்பே இழந்து விட்டமையாலும்; ஆங்கிலராட்சி எத்துணை முன்னேற்றினும், அறிவியற் கல்வி எத்துணை அறிவு புகட்டினும், நயன்மைக் கட்சி (Justice Party) எத்துணைக் கைதூக்கினும், மொழி நூலாராய்ச்சி எத்துணை உண்மை வெளிப்படுத்தினும், பெரியார் எத்துணை எச்சரிக்கினும், மறைமலையடிகள் எத்துணை வழிகாட்டினும், மேனாடு சென்று மேலையரொடு எத்துணைப் பழகினும்; இருண்ட நாடுகளும் விடுதலை பெற்று முன்னேறிச் செல்லும் போதும், மேலையர் திங்களையும் பிற கோள் களையுஞ் சென்றடையுங் காலும்; அடுத்த வீட்டிற் குள்ளுங் கால்வைக்கத் தகுதியற்றவராய்க் கடுகளவும் உணர்ச்சியின்றி அடிமைத் தனத்திலேயே பெருமை கொள்வதும், அறிவுறுத்தும் இனத்தானை எள்ளி நகையாடுவதும், அந்தோ! எத்துணை இரங்கத் தக்க துன்பச் செய்தியாம்!

அ-ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மைய ரேனும், ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Sovereignty) கொண்ட தனிநாடு பெற்றுவிட்டனரே! நூறாயிரம் ஆண்டிற்கு முன்பே தோன்றி ஒருகால் நாவலந்தேய முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?; வடநாட்டு மொழி (இந்தி) அடர்த்து மீதூர்ந்து வருதையுந் தடுக்கவில்லை? ஆங்கிலர் நீங்கின பின் முறைப்படி தமிழக மன்றோ முதன்முதல் விடுதலை பெற்றிருத்தல் வேண்டும்? ஆங்கிலர் ஆண்ட அக்காலத்து உரிமைகூட இக்காலத்தில் இல்லையே! இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையே யாம்.

ஒரு நாட்டு மக்கள் முன்னேறுவதற்கு மொழியே வழியாயினும், அம்மொழியின் திறமறிந்து அவர்தம் நாட்டுரிமையைக் காத்தற்கு வரலாறு இன்றியமையாத தாம். வீட்டிற்கு ஆவணம் போன்றதே நாட்டிற்கு எழுதப்பட்ட வரலாறு. அவ் வரலாறும் உண்மையானதா யிருத்தல் வேண்டும். இவ்விருபதாம் நூற்றாண்டிலும், பல்கலைக் கழகத் துணைக் கண்காணகரும் கல்வியமைச்சரும் கல்வித்துறை