பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

சொல்

சொற்களை முதனிலை, ஈறு, புணர்ச்சி, சாரியை, இடைநிலை, திரிபு என்னும் ஆறுறுப்பாகப் பகுத்தும்; இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என மூவகையாக வகுத்தும் மொழிநூற்கு அடிகோலியது தமிழே.

பொருள்

தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்தமையால், சொல்லிலக்கணத்தை யடுத்துச் சொற்றொட ரிலக்கணத்தைக் கூறாவிடினும், செய்யுளிலக்கணத்தைக் கூறி அதன்பின் பொரு ளிலக்கணத்தைக் கூறியிருக்கலாம். ஆயின், முதனூலாசிரியர் மெய்ப் பொருளறிஞரா யிருந்ததனால், மொழிநடை எதுவாயினும் பொருளே அதன் உள்ளீடென்றும், தனிச்சொற்கும் பொருளுண் டென்றும் கண்டு, அதனையே சொல்லிற்கடுத்துக் கூறியதோடு, அதற்கே சிறப்புக் கொடுத்துச் செய்யுளை அதனுள்ளடக்கி, மூன்றாம் அதிகாரத்தைப் பொருளதிகாரமெனப் பெயரிட்டு இயற்றமிழ் இலக்கண நூலின் முடிமணியாக்கினார். திருக்கோவிலின் முகமண்டபமும் இடைமண்டபமும் உண்ணாழிகையும் போல, எழுத்தும் சொல்லும் பொருளும் முறையே ஒன்றனொன்று சிறந்தன வாகும்.

பிற்காலத்துப் பாண்டியனொருவன், எழுத்ததிகாரமும் சொல்ல திகாரமும் வல்லாரைமட்டும் தலைப்பட்டுப் பொருளதிகாரம் வல்லாரைத் தலைப்படாதபோது, புடைபடக் கவன்று, “என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்” என்று வருந்தியதாக, இறையனா ரகப்பொருளுரை கூறியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது. இதனால், தமிழன் பெருமையையும் தமிழின் பெருமையையும் ஒருங்கே உணரலாம். ஏனை மொழி யிலக்கண நூலாரெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என்னும் நாலொடு நின்றுவிட, தமிழிலக்கண நூலார் மட்டும் யாப்பின் பொருளுக்கும் இலக்கணம் வகுத்தது, குமரிநாட்டுத் தமிழரின் ஒப்புயர்வற்ற அகக்கரண வளர்ச்சியைக் காட்டும். பொருளிலக்கணம் போலப் பண்டைத் தமிழனின் நுணுக்கத்தைக் காட்டும் சான்று வேறெதுவுமில்லை.

புலமை

எல்லாப் பொருள்களையும் அகம், புறம் என இரண்டாகப் பகுத்து, ஒவ்வொன்றையும் எவ்வேழு திணையாக வகுத்திருக்கின்றார் முதனூலார்.