பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




127

பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்" என்றிருப்பது, குமரி நாட்டினின்று நாகரிக வளர்ச்சியில்லா நிலையில் மேனாடு சென்ற மாந்தர் வழியினர், நாளடைவில் வெள்ளையராகி, பிற்காலத்தில் அங்குச் சென்ற நாகரிக மாந்தரின் மகளிரை மணந்துகொண்டனர் என்பதையே குறிக்கும்.

அதே அதிகாரம் 4ஆம் திருமொழியில் “அக்காலத்தில் அரக்கர் ஞாலத்தி லிருந்தனர்” என்பது, ஆப்பிரிக்க மாந்தர் அக்காலத்திலும் கருத்தும் பருத்தும் இருந்ததையே காட்டும்.

இனி, 7ஆம் 8ஆம் அதிகாரங்களில் வெள்ளச் செய்தியையும், 9ஆம், 10ஆம் அதிகாரங்களில் நோவாவின் மரபுப் பெருக்கத்தையும், கூறியபின், 11ஆம் அதிகாரம் 2ஆம் திருமொழி, “மக்கள் கிழக்கே யிருந்து வழிநடந்து வருகையில், சினெயார் நாட்டிற் சமநிலத்தைக் கண்டு, அங்கே குடியிருந்தனர்" என்றிருப்பது, கடல்கோட்குப்பின், நாவலந் தேயத்தினின்று ஒரு கூட்டத்தார் நிலவழியாக மேலையாசியா சென்று தங்கினர் என்பதையே தெரிவிக்கும்.

கடல்கோளச்சத்தினால் மட்டுமன்றி, வாணிகஞ் செய்தற்கும் தமிழர் பலர் வடக்கே சென்று கங்கை நாட்டிற் குடியேறினர்.

குறிஞ்சித் தெய்வமாகிய சேயோன் வணக்கத்தினின்றே சிவநெறி திரிந்ததனால், சிவனுக்கும் மலையகமே சிறந்த இருக்கையாகக் கொள்ளப்பட்டது. பனிமலை கடலடியினின் றெழுந்த பின்பும், குமரிமலையின் பெருமை குன்றாதிருந்ததனால், அஃதிருந்தவரை பாண்டியன் பெருமிதத்தோ டிருந்தான். அஃது மூழ்கியபின், அவன் தன் நாட்டின் சிறுமையையும் தாழ்வையும் நீக்குவதற்காக மட்டு மன்றி, தன் குடி தொன்றுதொட்டு வழிபட்டுவந்த சிவனுக்கு ஒரு தகுந்த இருக்கை யமைக்கவுமே, பனிமலையைக் கைக்கொண்டான். அம் மலையின் மேற்பகுதி வெண்பனிக்கட்டி மூடி என்றும் வெண்ணிறமாய்த் தோன்றுவதால், வெள்ளிமலை யெனப்பட்டது. அதன் கொடுமுடியே சிவனிருக்கை யாகவும் மண்ணுலகப் பேரின்ப நிலையமாகவும், சிவநெறியாராற் கருதப் பெற்றது. பாண்டியர் பன்முறை பனிமலைமேற் கயற்பொறி பொறித்தது, வேத்தியல் மட்டுமன்றித் தேவியல் தொடர்புங் கொண்டதாகும். இக்காலத் தமிழகச் சிவமடங்களும் வெள்ளிமலைத் தொடர்பு கூறுதல் காண்க.

சிவனடியார்க்குச் சிறந்த அக்கமணி (உருத்திராக்கம்), பனிமலை யடிவாரத்துள்ள நேபாள் நாட்டிலேயே தொன்றுதொட்டு விளைகின்றது. பஃறுளியாறு மூழ்கிய பின் கங்கையாறே நாவலந் தேயப் பேரியாறானதனாலும், வெள்ளிமலையைத் தன் குடுமியாகக் கொண்ட பனிமலையினின்று அது தோன்றி வருவதனாலும், சிவநெறியார்க்கு அதுவே தலைசிறந்த திருநீர்நிலை யாயிற்று.