பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




131

யவ என்று மொழிபெயர்த்தான். அது பின்னர் ஜவ-ஜாவ எனத் திரிந்து தமிழிற் சாவகம் என்னும் வடிவுகொண்டது. சாலித்தீவின் தலைநகர் சாலியூர்.

சாலித்தீவைப் பாண்டியன் கைப்பற்றியபின், தமிழர் அங்குச் சென்று குடியேறினர். அதனால், அத் தீவின் பல பிரிவுப் பெயர்கள் இன்றும் பாண்டியன், மதியன், புகார், பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி, செம்பூட்சேய் என்று தமிழ்ப்பெயர்களே கொண்டு விளங்குகின்றன என்றும்; மீனன் காப்பு என்னு மிடத்துள்ள மலையர், தம் முன்னோர் இந்தியாவினின்று வந்ததாகக் கூறுகின்றனர் என்றும்; கெரினி (Gerini) என்னும் ஆசிரியர், அங்கு வழங்கும் மலையன் கோலன் (Maleon Kolan) என்னுங் குடிப்பெயரை, மலையர் சோழர் என்னும் தமிழரசர் குடிப்பெயர்களுடன் இணைத்துக் காட்டுகின்றனர் என்றும்; திருவிசயம் (ஸ்ரீ விஜய) என்னும் அரையத் தலைவனுக்குச் சுறவக் கொடியும் திருமாற விசயோத்துங்கன் (ஸ்ரீமாற விஜயோத்துங்கன்) என்னும் பெயர் உண்டென்றும்; ரா. ராகவையங்கார் தாம் எழுதியுள்ள தமிழ் வரலாறு என்னும் நூலிற் கூறியுள்ளார் (பக்.338-9).

மீனன் மீனவன்; அஃதாவது மீனக்கொடி யுடைய பாண்டியன். மீனன் காப்பு என்பது பாண்டியன் காவலுள்ள இடம் என்று பொருள்படும்.

தமிழர் படிப்படியாகப் பக்கத்துத் தீவுகளிலும் நிலங்களிலும் பரவினதாகத் தெரிகின்றது. சாலிக்கு வடகிழக்கில் ஒரு சிறு தீவு மதுரா என்றும், வடமேற்கில் ஒரு பெருந்தீவு சுமதுரா (Sumatra) என்றும், வடக்கில் ஒரு மாபெருந் தீவு பொருநையோ (Borneo) என்றும், சுமதுராவிற்கு வடக்கிலுள்ள தீவக்குறை மலையா (Malaya) என்றும் பெயர் பெற்றுள்ளன.

பொருநை (தாம்பரபரணி) என்பது பாண்டிநாட்டு ஆற்றுப் பெயர். மலையம் என்பது பொதியமலைப் பெயர். சுமதுரா என்பதன் முன்னொட்டும் சிங்கபுரம் (Singapore) என்னும் தீவுப் பெயரும், ஆரியச் சார்பால் ஏற்பட்டனவாகும். புரம் என்னும் ஈறு தமிழ்.

சோழர் வெற்றிச் செயல்கள்

66

நளியிரு முந்நீர் நாவா யோட்டி

வளிதொழி லாண்ட வுரவோன் மருக

(புறம்.66)

என்று சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடியிருப்பதால், அவன் முன்னோருள் ஒருவன் ஆழ்கடல் கடந்து மீண்டமை அறியப்படும். வளிதொழிலாள்வ தென்பது, பருவக் காற்றறிந்து அதன் வாக்கிற் கலஞ்செலுத்துதல்.