பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

"அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றா சிரியன், தன் ஆராய்ச்சியை, இதுவரை மிக நீடப் பெரு வழக்காகக் கையாளப்பட்டு வந்த முறைப்படி கங்கைச் சம வெளியினின்று தொடங்காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்றுப் பாய்ச்சல் நிலங்களினின்று தொடங்குதல் வேண்டும்’

என்று எழுதினார். இந்திய வரலாற்றுத் தந்தையாகிய வின்சென்று சிமிது, தம் இந்திய முந்திய வரலாறு (Early History of India) என்னும் பொத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டி,

“குமுகாய வேறுபாடுகளும் அரசியல் மாற்றங்களும் உட்பட்ட செவ்விய இந்திய முந்திய வரலாறு விரிவாக எழுதப்படும் போது, கல்வி மிக்க பேராசிரியர் கொடுத்துள்ள குறிப்புகள் கைக்கொள்ளப் பெறும்; வரலாற்றாசிரியரும் தெற்கினின்று தொடங்குவார். அத்தகைய புரட்சிமுறையில் வரலாறு வரைதற்கேற்ற காலம் இன்னும் வராமையால், இன்று நான் பழைய முறையையே பின்பற்று கின்றேன்” என்று வரைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டாகின்றது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராயிருந்த (P.T.) சீநிவாச ஐயங்காரும் இராமச்சந்திர தீட்சிதரும், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களென்று நாட்டி, முறையே, தமிழர் வரலாறும் (1929), தென்னாட்டு வரலாறும் (1951) சிறந்த முறையில் எழுதியுள்ளனர்.

குமரிநாட்டுக் குறிப்பைக் கொண்ட சிலப்பதிகாரம் 1892-லேயே வெளிவந்ததாயினும், 1920-ற்குப் பின்னரே தமிழாராய்ச்சியாளரி டைக் குமரிநாட்டுக் கொள்கை வலுவுறலாயிற்று. குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்பது, இன்று முடிந்த முடிபும் மறுக்கொணா ததுமான உண்மையாகிவிட்டது. ஆயினும், ஏதேன் தோட்டக்கதை எழுத்துப்படி நம்பப்படுவதனாலும், பிராமணரின் சொல்வன்மை யினாலும், தமிழரின் சொலமாட்டாமையாலும், வையாபுரித் தமிழர் தொகை வளர்ச்சி யினாலும், மேலையர் இன்னும் இவ் வுண்மையை ஒப்புக்கொண்டிலர். அதனால், தமிழரின் முன்னோர் மேலையாசி யாவும் கிரீசும் போன்ற நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவர் என்னும் அடிப் படையிலேயே, மேனாட்டு மொழியா ராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இற்றை யறிவியல்களெல்லாம் மேலையர் கண்டு வளர்த்துவருபவை யாதலாலும், சிறந்த கருவிகள் அவரிடை யுண்மையாலும், ஆராய்ச்சி யில்லாரும், கற்ற பேதையரும், வேலைவாய்ப்புப் பெறும் இளைஞரும், கோடிக் குறிக்கோட் பொருளீட்டிகளும், தம் பெயர் விளம்பரத்தையே விரும்பும் தமிழ்ப்பற்றிலிகளும், மேலையர் சொல்வதையெல்லாம் தெய்வத் திருவாய்மொழியென நம்புகின்றனர் அல்லது கொள்கின்றனர்.