பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

ஒன்றிரண்டு தவிர ஏனைய வெல்லாம், சிதலரித்தும் அடுப்பி லெரிந்தும் குப்பையிற் கலந்தும் பதினெட்டாம் பெருக்கில் வாரி யெறியப்பட்டும் பல்வேறு வகையில் இறந்துபட்டமையாலும்; முதுபண்டை வரலாற்றிற்கு அக்காலத்து இலக்கியச் சான்றும் இல்லாது போயிற்று.

ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டு போயினும், தொல்காப்பியம், இறையனா ரகப்பொருளுரை முதலிய நூல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புகள் குமரிநாட்டுத் தமிழர் வாழ்க்கையையும் அந் நாட்டியல்பையும் பற்றியன வாதலால், அவை தமிழரின் முது பண்டை வரலாற்றிற் குதவுவனவே.

தொல்காப்பியம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு நூலேயாயினும் அதிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கி.மு. 50ஆம் நூற்றாண்டிற்கு

முந்தினவையாகும்.

"முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்

99

என்று தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார் கூறி யிருப்பதோடு, நூல்முழுவதும் “என்ப” “என்மனார் புலவர்” எனச் சார்பிற் சார்பு நூன்முறையில், முன்னூலாசிரியரைத் தொல்காப்பியர் தொகுத்துக் குறித்திருத்தல் காண்க.

உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்னும் உண்மையை, பேரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள 'தமிழரின் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக.

தமிழிலக்கணம், தமிழிலக்கியப் பாகுபாடு, தமிழ் மரபு, குமரிநாட்டுத் தமிழர் வகுப்புகள், அவர் தொழில்கள், அவர் மணமுறை, அவர் பழக்கவழக்கம், அக்காலத்து அரசியல், அக்காலப் போர்முறை முதலியன தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளன.

இறையனா ரகப்பொருளில், முக்கழக வரலாறும், தென்மதுரை கதவபுரம் (கவாடபுரம்) என்னும் பழம் பாண்டிநாட்டுத் தலைநகர்ப் பெயர்களும், கழகப் பாண்டியர் புலவர் தொகையும்; சிலப் பதிகாரத்தில், பஃறுளியாறும் குமரிமலையும் முதற் கடல்கோளும் பாண்டிய ஆள்குடி முன்மையும்; அடியார்க்குநல்லாருரையில்,