பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




21

முழுகிப்போன பழம்பாண்டி நாட்டு நிலப்பரப்பும், அதன் தென்வட வெல்லைகளும், அவற்றிடைப் பட்ட பல்வேறு நாடுகளும்; புறநானூற்றில் பஃறுளியாறும் அவ் வாற்றையுடைய பாண்டியன் பெயரும்; கலித்தொகையில், இரண்டாங் கடல்கோளும் அதற்குத் தப்பிய பாண்டியன் செய்கையும் குறிக்கப்பட்டுள்ளன.

முதலிரு கழகமும் வரலாற்றிற்கு முற்பட்ட நெடுஞ் சேய்மைக் காலத்தன வாதலின், அக்காலத்துப் புலவர் பெயர்களும் நூற்பெயர் களும் தவறாகக் கூறப்பட்டுள்ளன. குமரிநாட்டின் தொன்மையையும் அந் நாட்டை யாண்ட பாண்டியர் தொகையையும் தமிழின் முன்மையையும் நோக்கின், முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால அளவுகள் நம்பத்தகாதனவும் நிகழ்ந்திருக்கக் கூடாதனவும் அல்ல. கடைக்கழகத்திற்குக் குறிக்கப்பட்டுள்ள கால அளவில், இடைக் கழகத்திற்கும் அதற்கும் இடைப்பட்ட காலமும் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும்.

பஃறுளியா றென்பது திருவாங்கூர் நாட்டிலுள்ள பறளியா றென்றும், அதன் கயவாயில் கடலரிப்பாற் கரைநிலங் கரைந்து போனதையே, இளங்கோவடிகளும் பிறரும் ஒரு தென்பெரு நிலத்தைக் கடல்கொண்டதாகக் கூறிவிட்டன ரென்றும், தமிழ்ப் பகைவரான சில ஆரியர் ஒரு புரளியை உண்டுபண்ணி யுள்ளனர். தென்பாலிமுகம், தென்மதுரை, பன்மலைத் தொடரான குமரிமலை, ஏழேழ்நாடுகள், பிறநாடுகள், குமரியாறு, எழுநூற்றுக் காதவழி முதலிய செய்திகளுள் ஒன்றுகூட அவர் கூற்றால் விளக்கப்படா திருத்தல் காண்க.

இடைக்கழகத்தில் எண்ணாயிரத் தெச்சம் தமிழ்நூல்கள் இருந்தன என்பது போன்றவை செவிமரபுச் செய்திகள்.

பழக்கவழக்கங்கள் என்பன, இலக்கியத்திற் சொல்லப்பட் டுள்ளனவும் இன்று நடைமுறையிற் காண்பனவுமான பல்துறை மரபுவினைகள்.

தமிழின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, (சொல்) வளம், தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய நிலைமைகளை யுணர்த்தும் சொற்களும் சொல்லமைப்பும் சொற்றொடரமைப்பும் மொழியியற் சான்றுகளாம்.

பல்வேறு ஊழிகளில், நீர்வினையாலும் நெருப்புவினையாலும் தோற்றமும் மாற்றமுமடைந்த நிலப்படைகளும் பாறைகளும் மலைகளும் நிலநூற் சான்றுகளாம்.

நாடும் நகரும் ஆறும் மலையும் கடற்குள் மூழ்கியிருப்பதும், கடலின் பரப்பும் எல்லையும் ஆழமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகையில் மாறியிருப்பதும் கடல்நூற் சான்றுகளாம்.