பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




29

கொம்பும் எருமைக் கொம்பும் யானை மருப்புமே முதற்கண் வ வளைதடியாகப் பயன்பட்டிருத்தல் வேண்டும். அவை கிடையா விடத்தே அவை போன்ற வளைதடிகளைப் பயன்படுத்தியிருப்பர்.

முல்லைநிலப் பாறைகளிலுள்ள பள்ளங்களிலும் குழிகளிலு முள்ள நீர், கதிரவன் வெம்மையாலும் காட்டுத் தீயாலும் காய்ந்த போது, அதிற் கிடந்த உணவுப் பொருள்கள் சுட்ட வுணவினும் பருத்தும் மென்மையாகியும் சுவைமிக்கும் இருந்ததைக் கண்ட மாந்தர், கற்கலங்களில் வரகு தினை முதலியவற்றின் அரிசியைச் சோறாக்கவும், அவரை துவரை முதலிய பயறுகளை அவிக்கவும் கற்றுக்கொண்டனர். பட்ட மரங்கள் உராய்ந்து அடிக்கடி நெருப் பெழக் கண்டதனால், இயற்கை நெருப்பில்லாத போது ஞெலி கோலாற் கடைந்து செயற்கை நெருப்பையும் உண்டாக்கிக் கொண் டனர். வீடுதொறும் நாள்தொறும் வேளைதொறும் தீக்கடையத் தேவையில்லாவாறு, ஊர் முழுவதற்கும் பொதுவாக ஓர் இடத்தில் இரவும் பகலும் கட்டை யெரியவிட்டு அவியா நெருப்பைப் பேணி யிருத்தலும் வேண்டும்.

உடுக்க மரவுரி போன்ற நாராடையும், போர்த்திக்கொள்ள ஆட்டுமயிர்க் கம்பளியும், முதற்கண் கைப்பின்னலாகவும் பின்னர்த் தறிநெசவாகவும் அவர் செய்துகொண்டனர். படுக்க மூங்கிற்பாயும் ஓலைப்பாயும் முடைந்துகொண்டனர்.

சந்தனச் சேற்றாலும் வண்ணச்சாந்தாலும் இருபாலாரும், சிறப்பாகப் பெண்டிர், மேனிமுழுதும் பல்வேறு ஓவியம் வரைந்து கொள்வதும், நிலையாயிருக்குமாறு பல்வகை யுருவங்களைப் பச்சை குத்திக்கொள்வதும் பெருவழக்காயிருந்தது.

குடியிருக்க வட்ட மான கூரை வீடுகளைக் கட்டிக் கொண்டனர். முதலில் மரத்திலும் மரத்தடியிலும் வதிந்ததனால், வட்டமாகக் கிளைகள் படர்ந்தும் நிலத்திற் படிந்துமுள்ள மரத்தின் போங்கைப் பின்பற்றி, வீட்டின் வடிவை அமைத்ததாகத் தெரிகின்றது. சுற்றுச் சுவரைக் கல்லுள்ள விடத்தில் மட்சாந்து பூசிக் கல்லாலும், அஃதில்லா விடத்தில் மண்ணாலும் அமைத்தனர்.

கூலங்களும் காய்கறிகளும் போன்ற கெட்டிப் பொருள்களை டுவைப்பதற்கு, பனைநார்ப் பெட்டிகளும் மூங்கிற் கூடைகளும் முடையப்பட்டன. நீரையும் நீர்ப்பொருள்களையும் வார்த்து வைப்பதற்கு, மூங்கில் நாழியும் மரத்திற் கடைந்துகொண்ட கடை காலும் ஆட்டுத்தோற் பையும் பயன்படுத்தப்பட்டன. சமைப்பதற்குக் கற்கலம் உதவிற்று. கல்லுதல் = தோண்டுதல் அல்லது குடைதல். கல்லப்பட்ட ஏனம் கலம் என்னப்பட்டது.