பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

வணக்கம்பற்றியோ, அவரிடை எவ்வகை வகுப்பு வேறுபாடும் இருந்ததில்லை. எல்லாரும் எல்லாத் தொழிலும் செய்து ஒரே வகையாய் வாழ்ந்து ஒரே வகுப்பாயிருந்தனர். பழங் கற்காலத் தாழ்வுநிலையும் புதுக் கற்கால உயர்வுநிலையும் எல்லார்க்கும் பொதுவாகும்.

நீலமலையிலுள்ள கோத்தர் பல்தொழிலும் தெரிந்தவராய் ஒரே வகுப்பாராக வாழ்கின்றனர். ஆடவர் ஒவ்வொருவரும் உழவு, கால்நடை வளர்ப்பு, நெசவு, வணிகம், தச்சு, கொல், தட்டார வேலை, சலவை, மஞ்சிகம் (முடிதிருத்தம்) ஆகிய வாழ்க்கைப் பணிகள் அனையவும் செய்து வருகின்றனர். தொகைபற்றி யன்றித் தொழில்பற்றி ஒருவர்க்கும் இன்னொருவர் உதவி வேண்டியதில்லை. இங்ஙனமே கற்கால மாந்தரும் வாழ்ந்திருத்தல் வேண்டும்.

கற்காலங் கழிந்து மருதநில வாழ்வு தொடங்கிய பின்னரே, தொழிற்பிரிவும் அதுபற்றிய வகுப்பு வேறுபாடுந் தோன்றின.

2. பொற்காலம் (Gold Age)

(தோரா. கி. மு. 50,000-30,000)

தமிழர் வரலாற்றுக் காலப் பகுதிகளுள், பழங் கற்காலம் புதுக் கற்காலம் என்னும் இரண்டும் அவ்வக் காலத்தொடு முடிந்து போனவையாகும். பழங் கற்காலக் கருவிகள் புதுக் கற்காலத்திலும், புதுக் கற்காலக் கருவிகள் பெரும்பான்மையாகப் பொற்காலத்திலும், வழங்கியிரா. ஆயின், பொற்காலம் முதலிய பிற்காலக் கருவிகள் உலகுள்ள காலமெல்லாம் வழங்கும்.

பொற்காலம் செம்புக்காலம் உறைக்காலம் இரும்புக்காலம் எனப் பிரித்த தெல்லாம், பெரும்பாலும் அவற்றின் பயன்பாட்டுத் தொடக்கம் பற்றியே யன்றி முடிவுபற்றி யன்று. ஆயினும், முடிவு குறிக்கப்பட்டிருப்பது, அவ்வக் காலத்து மாழை பெரும்பான்மை யாகப் பயன் படுத்தப்பட்ட காலத்தின் முடிவைக் குறித்தற்கே என அறிக.

பொன் அணிகலத்திற்கும், செம்பும் உறையும்(வெண்கலமும்) குடவமும்(பித்தளையும்) நீர்க்கலத்திற்கும், இரும்பு எல்லாக் கருவிகட்கும் என்றும் பயன்படுத்தப்படும். இவற்றுள், பொன் மிகச் சிற்றளவாகவும் இரும்பு மிகப் பேரளவாகவும் இருக்கும்.

மாழைகட்கு இந் நூலிற் கூறப்பட்டுள்ள காலங்கள், மேலை யறிஞர் கூறுவனவற்றொடு ஒவ்வா. அவர் தமிழ் நாகரிகத்தின் தொன்மையையும் முன்மையையும் அறியாராதலின், மாழைக் காலங்களைப் பிற்படக் கூறுவதில் வியப்பொன்று மில்லை.