பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

உழும்போதும் அறுவடை செய்யும் போதும் கிணைப்பறை (உறுமி) கொட்டப்பட்டது.

நெல்லும் வாழையும் போன்றவற்றை நன்செயிலும், சோளமும் கேழ்வரகும் போன்றவற்றைப் புன்செயிலும், வரகும் சாமையும் போன்றவற்றை வானாவாரிக் கொல்லையிலும் பயிரிட்டனர். நீர்ப்பாசன ஏந்து (வசதி) இருக்குமிட மெல்லாம் புன்செயை நன்செயாக்கினர். பதினெண் கூலமும் எள்ளும் இஞ்சியும் மஞ்சளும் பருத்தியும் பிறவும் விளைக்கப்பட்டன.

நீர்ப்பாசனத்திற்கு முதலில் ஆறும் பொய்கையும் ஆகிய இயற்கை நீர்நிலைகளையே சார்ந்திருந்தனர். பின்னர் அவை யில்லாத விடங்களில், கண்ணாறுங் கால்வாயும் ஏரியுங் குளமும் வெட்டிக் கொண்டனர். அவை எல்லார்க்கும் பொதுவா யிருந்தமையாலும், கோடைக்காலத்தில் வற்றிப்போனமையாலும், ஆண்டு முழுதும் பயன்படுமாறும் சொந்தவுடைமையா யிருக்குமாறும், நீர் சுரக்குமிடமெல்லாம் கிணறுகளையும் வெட்டிக்கொண்ட அக்காலத்தில் மக்கள்தொகை மிகக் குறைவாயிருந்தமையாலும், நிலப்பரப்பில் முக்காற் பங்கிற்கு மேலும் மரமடர்ந்த அடவியா யிருந்தமையாலும், கோடைமழை, காலமழை, அடைமழை, படைமழை ஆகிய நால்வகை மழையும் காலந் தப்பாது பெய்து வந்தன. அ(ல்)கால வம்ப மழையும் ஒரோவொரு சமையம் பெய்தது.

னர்.

கால்வாய் நீரிறைக்க இறைபெட்டி (இறைகூடை), உழணி (ஓணி) முதலிய கருவிகளும், கிணற்று நீரிறைக்க ஏற்றம், கம்மாலை என்னும் பொறிகளும் பொறிகளும் தோன்றின. அம்=நீர். அம்-கம்=நீர். ஆலுதல்=ஆடுதல், சுற்றுதல். ஆல்-ஆலை=சுற்றிவரும் பொறி. செக்காலை, கரும்பாலை முதலியவற்றை நோக்குக. இன்றும், திருக்கோவலூர்க்கும் வில்லிபுரத்திற்கும் இடைப்பட்ட ஊர்களிற் சுற்றுக் கவலையாடுதல் காண்க. கம்மாலை-கமலை-கவலை. ஏற்றம் கையால் இயக்கப்படுவது. அது கைத்துலா, ஆளேறுந் துலா என இருவகை. கம்மாலை எருது பூட்டி இயக்கப்படுவது.

நெற்சோறு மருதநிலத்தில் முதன் முதலாகப் பொங்கப்பட்டது. சொல் = நெல். சொல் - சொன்றி - சோறு. சிற்றுண்டியாகப் பயன் படுமாறு, அரிசிப்பொரி பொரிக்கவும் அவலிடிக்கவும் கற்றுக் கொண்டனர். பயறு வகைகளை அவித்தும் சுண்டியும் தின்றனர். அவற்றின் பருப்பாற் கும்மாயமுங் கூட்டும் சாறுங் குழம்பும் ஆக்கிச் சோற்றுடன் கலந்துண்டனர். வாழை, வழுதுணை(கத்தரி), வெண்டை, சுரை, பீர்க்கு, பூசணி முதலிய காய்களைத் தனித்தும் பருப்புடன் சேர்த்தும் கறிவகைகளாகச் சமைத்தனர்.