பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




45

மதவியல் வாழ்க்கையில், பொற்கால மருதநிலத் தமிழர், பழைய குறிஞ்சி முல்லைத் தெய்வங்களுடன் இறந்த அரசனையும் தெய்வமாக வணங்கியதாகத் தெரிகின்றது.

அக்காலத்தில், பெரும்பண்ணைகளி லெல்லாம், தாமாக வந்து ஒட்டிக்கொண்டவரும் விலைக்கு வாங்கப்பட்டவருமாக, இருசார் அடிமையர் இருந்தனர். அவர் தப்பி ஓடிப்போனாலும் அடிமைய ரென்று அறியப்படுவதற்கு, அவர் காதில் துளையிடப்பட்டது.

தெய்வப்பற்று மிகுந்த பிற்காலத்தில், ஆண்டி முதல் அரசன்வரை எல்லா வகுப்பாரும் தம்மை இறையடியார் என்று காட்டுதற்குத் தம் காது குத்தித் துளையிட்டுக்கொண்டதாகத் தெரிகின்றது. அத் துளை தூர்ந்து போகாவாறே, முதலில் ஓலைச் சுருளும் பின்னர்ப் பொன்னோலையும் பிறவணிகளும் பெண்டிர் அணிந்து வந்திருக்கின்றனர். பாம்படம் (நாகபடம்), தண்டொட்டி, அரிசித்தழுப்பு, பூச்சிக்கூடு, மேலீடு என்னும் ஐவகை நகைகளை யணிதற்குத் தம் இளமையிலேயே குணுக்கு என்னும் குதம்பையால் தம் காதுத் துளையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டனர். குமரிநாட்டுடன் இணைந்திருந்த பாண்டிநாட்டில், இவ் வழக்கம் இன்றும் இருந்துவருகின்றது. அது காது வளர்த்தல் எனப்படும். ஆடவர் தம் சோணைத்தண்டை அத்துணை நீட்டாவிடினும், குழையும் குண்டலமும் குண்டுக் கடுக்கனும் அணியுமளவு துளையை அகலித்துக் கொண்டனர்.

உழவுத்தொழில் வரவர வளர்ந்து முழுநேர வுழைப்பையும் வேண்டியமையாலும், அதற்குப் பல புதுக் கருவிகள் வேண்டி யிருந்தமையாலும், வாழ்க்கையிலும் நாகரிகம் வளரவளரப் புதிது புதிதாகப் பல தேவைகள் தோன்றியமையாலும், எல்லார்க்கும் எல்லா வேலையுஞ் செய்ய நேரமில்லை யென்றும்; நேரமிருப்பினும், விருப்பங்களும் திறமைகளும் இயற்கையாகவே மக்கட்கு வேறு பட்டிருப்பதால், எல்லாரும் எல்லா வேலையுஞ் செய்ய வியலா தென்றும் கண்டபோது, இயற்கையாகவே பற்பல தொழிற் பாதீடுகள் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்டன.

மருதநில வாழ்க்கையில், அளவான ஊர்தொறும், முதன்முதற் கோவில் வழிபாடு செய்ய ஒரு பூசகனும், காவல் செய்து வழக்குத் தீர்க்க ஒரு தலைவனும், பண்டமாற்ற ஒரு கடைக்காரனுந் தோன்றியிருத்தல் வேண்டும்.

அதன்பின், உழவர்க்கு வேண்டிய பொருள்களைச் செய்துதவப் பக்கத் துணையாகப் பல தொழிலாளர் படிப்படியாகத் தோன்றினர்.