பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

(3) மொழித்துறை

மொழியிழிபு : சிவனியம் மாலியம் என்னும் இரு மதமும் தோன்றிய தமிழ் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப் பட்டது.

சொல்லிழிபு: சோறு, தண்ணீர் முதலிய தூய தமிழ்ச்சொற்கள் பள்பறை வழக்கென்று தமிழராலும் பழிக்கப்பட்டன.

சொல் வழக்கு வீழ்வு : கழுவாய் (பிராயச்சித்தம்), சூள்(ஆணை) முதலிய நூற்றுக்கணக்கான அருமையான தமிழ்ச்சொற்கள், வழக்கு வீழ்த்தப்பட்டன.

சொல்லிறப்பு: ஆயிரக்கணக்கான இருவழக்குத் தமிழ்ச் சொற்களும் இறந்துபட்டன. இறந்த சொற்கு என்றும் எடுத்துக் காட்டில்லை.

சொற்பொருளிழப்பு: உயிர்மெய் என்பது, ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்வரைப்பட்ட உயிரொடு கூடிய மெய் (living thing). பிராணி என்னும் வடசொல் வழக்கினால், உயிர்மெய் என்னும் சொல் தன் பொருளை இழந்தது, உயிரி என்றொரு சொல்லுந் தோன்றவில்லை.

புஜம் என்னும் வடசொல் வழக்கினால், தோள் என்னும் தமிழ்ச் சொல் தன் பொருளை யிழந்து, தோள்பட்டையைக் குறித்து, சுவல் என்னும் தென்சொல்லை வழக்கு வீழ்த்தியும் உள்ளது.

தமிழையும் தமிழ்ச்சொற்களையும் போற்றிக் காக்க வேண்டு மென்னும் உணர்வு, இன்றும், முப்பல்கலைக்கழகத் துணைக் கண் காணகர்க்கும் கல்வியமைச்சர்க்கும் தலைமைத் தமிழ்ப் பேராசிரி யர்க்கும் இல்லை.

(4) இலக்கியத் துறை

பல்லாயிரக் கணக்கான முதலிரு கழக நூல்களும் பெயருமின்றி அழிக்கப்பட்டுவிட்டன. தொல்காப்பியமும் திருக்குறளுந் தவிர, கிறித்துவிற்கு முற்பட்ட எல்லா நூல்களும் இல்லாவாயின. பொது விலக்கியத்தைச் சேர்ந்த, பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பாடற்றிரட்டுகளும் கீழ்க்கணக்குப் பனுவல்களும் அல்லாது, அறிவியலும் கலையும்பற்றிய கடைக்கழகக் காலச் சிறப்பிலக்கியம் ஒன்றுகூட இன்றில்லை. பதிற்றுப்பத்து முதலும் ஈறும் இன்றி நிலை பெற்றுவிட்டது. அகத்தியம் முதுநாரை பரதம் ஆகிய முத்தமிழ்ப் பிண்ட நூல்களும், அவற்றிற்கு முந்திய முத்தமிழ் மாபிண்ட நூல்களும் இறந்துபட்டன.

பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர், அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான அரிய பண்டைத் தமிழ்