பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

திருத்தந்தையும் அருட்கடலுமான இறைவன் உருவிற்கு, தமிழர் தாமே தம் நெஞ்சார்ந்த அன்பு கனிந்த வணக்கத்தைத் தம் தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து, பேரின்பப் பெருமகிழ்ச்சி பெற முடியாவாறு, மேனாட்டினின்று வந்த பிராமணன் இடைநின்று, படைப்புத் தேங்காயை வாங்கி யுடைத்து, தமிழர்க்குத் தெரியாத, தனக்குந் தெளிவாக விளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழி யாகிய சமற்கிருதத்தில் தான் உருப்போட்டதைச் சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்திலும் (Bank) வரியகத்திலும் பணங் கட்டியவர் திரும்புவதுபோல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை கேடான தீவினை!

உயிரிழப்பு: சிறந்த சிவனடியாராக ஒழுகிய குற்றத்தினால், நந்தனார் என்னுந் தூயர், பட்டப் பகலிற் பலர் காணச் சுட்டெரிக்கப் பட்டார். இத்தகைய கொடிய நிலைமையும் 1940ஆம் ஆண்டுவரை தென்னாட்டி லிருந்துவந்தது.

(6) பொருளாட்சித் துறை

பொது விழப்பு: பிராமணர், மூவேந்தரிடத்தும் கோவலன் போன்ற செல்வரிடத்தும் பல்வகை தானமாகப் பெற்ற பொன்னிற்கும் ஆவிற்கும் நிலத்திற்கும் பிற பொருள்கட்கும் கங்குகரை யில்லை. சில வகுப்பாரிழப்பு:

66

குழலினும் யாழினும் குரன்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்

அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்" (சிலப். 5:35-7) என்று இளங்கோவடிகளாற் புகழ்ந்து பாடப்பெற்ற பாணர், மாட்டிறைச்சி யுண்டதனாற் புலையர் என்று இழித்திடப்பட்டு, 11ஆம் நூற் றாண்டிற்குப் பின் தம் தொழிலையும் வருவாயையும் இழந்தனர்.

ஐரோப்பியரும் அவர் வழியினரும் அராபியரும் யூதரும் இன்றும் மாட்டிறைச்சி யுண்பவரே. ஆரியப் பூசாரியரும் வேதக் காலத்தில் அதை விரும்பி யுண்டவரே.

தவத்திற் சிறந்த பரத்துவாசர் தம் புதல்வனுடன் காட்டில் வாழ்கையில், விருது என்னும் தச்சனிடம் பல ஆக்களை வாங்கிக் கொன்று தின்றார்.

செம்மறியாட் டிறைச்சியால் நான்கு மாதம் வரையும், வெள்ளாட் டிறைச்சியால் ஆறு மாதம் வரையும், காட்டெருமைக் கடா விறைச்சியால் பத்து மாதம் வரையும், தென்புலத்தார் (பிதுர்க்கள்) பொந்திகை (திருப்தி) யடைகின்றனர் என்று மனுதரும சாத்திரத்திற் கூறப்பட்டுள்ளது.