பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148


கணியர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை, தலைமையாசிரியர் சாமி வேலாயுதம் பிள்ளையொடு கூடிக் கலைச்சொற்கள் ஆக்குவித்தும், பின்னர் ஆட்சிச்சொல் அகரவரிசை தொகுப்பித்தும், தமிழாட்சி நடைபெறத்தக்க தொண்டு செய்தவராவர்.

இசைத் தமிழாராய்ச்சித் தொண்டர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், அவர் மகனார் வரகுண பாண்டியன், மதுரைப் பொன்னுச்சாமிப் பிள்ளை முதலியோர், இசைத் தமிழாராய்ச்சியால் தமிழிசையின் பெருமையையும் முதன்மையையும் நாட்டியவராவர்.

நடிப்புத்துறைத் தொண்டர்

இன்னிசை நடிகர் தியாகராசப் பாடகரும் நகைச்சுவை நடிகர் (N.S.) கிருட்டிணனும், நடிப்புத் துறையில் தமிழன் பெருமையையும் தமிழ்ப் பண்பாட்டையும் காத்தவராவர்.

தமிழ் வளர்த்த தனிப்பெரு முதல்வர் இராமசாமிக் கவுண்டர்

1925-ற்கும் 1950-ற்கும் இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டிற் கல்லூரி முதல்வராயிருந்த தமிழர் அனைவருள்ளும், வயிறு வளர்க் காது தமிழ் வளர்த்த தனிப்பெரு முதல்வர் அ.இராமசாமிக் கவுண்டர். கணிதப் பேராசிரியரா யிருந்தும் பெருங் கல்லூரிக்குச் சென்று பெருஞ்சம்பளம் பெறாது சேலத்திலேயே நிலைத்திருந்து,பண்பட்ட தமிழரையே பாடத்துறைத் தலைமையாசிரியராக அமர்த்தியும், பிற கல்லூரிகளில் இடம்பெறாத ஏழை மாணவர்க் கெல்லாம் இடந் தந்தும், திருக்குறட் கழகம் நிறுவி வகுப்பு நடத்தியும், திருக்குறட்கு உரை வரைந்தும், பெரியார்க்குத் துணை நின்றும், கல்லூரிகளிலும் மன்றங்களிலும் சொற்பொழிவாற்றியும், சாத்திரியார் கலைச்சொற் குழுவிலிருந்து பணிபுரிந்தும், எனக்கு வேண்டிய ஏந்துகளை யெல்லாஞ் செய்து என் மொழியாராய்ச்சியை முற்றுவித்தும், தம் துணையாசிரியர் சிலரைப் பிற கல்லூரி முதல்வராக்கியும், விருந்தோம்பி வேளாண்மை செய்து இறுதிவரை தமிழ் வாழ்வு வாழ்ந்தும், இறவாப் புகழ் பெற்றவர் சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர்.

தமிழரை முன்னேற்றிய நகராட்சித் தலைவர் இரத்தினசாமிப் பிள்ளை

இரண்டாந்தரமாயிருந்த சேலம் நகராட்சிக் கல்லூரியை முதற்றரமாக்கியும், ஆரியத்தை யெதிர்த்தும், இராமசாமிக் கவுண்டரை யூக்கியும், மறைமலையடிகளைப் போற்றியும், தமிழிசை மன்றம் நிறுவியும், தமிழையும் தமிழரையும் முன்னேற்றியவர், சேலம்