பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

தமிழர் வரலாறு

"பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது” என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும்.

பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டபாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது.

மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர்.

இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன்.

கோ. இளவழகன்,

பதிப்பாளர்.