பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

83

இதில் திருமாலுக்கு 8-ம் முருகனுக்கு, 31-ம் காடுகிழாள் என்னும் காளிக்கு 1-ம் வையைக்கு 26-ம் மதுரைக்கு 4-ம் உரியன. இதை,

"திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடல் திறம்".

என்னும் பழம்பாட்டுத் தெரிவிக்கும்.

பரிபாடலடிகளின் சிற்றெல்லை 25 என்றும், பேரெல்லை 400 என்றும் கூறுவர்.

அருகனையும் புத்தனையும்பற்றிய பரிபாடலின்மை, சமண புத்தம் தமிழ மதங்களன்மையைக் காட்டும். வையையை யும் மதுரையையும் பாடியது, அவற்றையும் தெய்வத்தோ டொப்பக் கருதி,

வையைபற்றிய

பாடல்களில், அக்கால மழைவளம், கோடையும் படகுவிடும் வையைப் பெருக்கு, மதுரை முழுதுங் கொண்டாடும் புது நீர் விழா. காதலரும் தனிப்பட்டவரும் தத்தமக் கேற்ற ஊர்திகளிற் சென்று பொன்மீன் முதலியவற்றை வையைக்குக் காணிக்கையாக இடல், நீர்விளையாட்டிற்குக் கொண்டு செல்லும் சிவிறி முதலிய கருவிகள், பல்வகை மிதவைகளும் தெப்பங்களும், நீர்விளையாட்டு விளையாடும் மக்கட் பெருக்கமும் நெருக்கமும், விளையாட்டின் விளைவாக நேரும் மகளிரூடல்களும் வஞ்சினங்களும் முதலியனவும்;

ம மதுரைபற்றிய பாடல்களில் மதுரை நகரமைப்பு, நகர வளம், மக்கள் தொழில், வாழ்க்கை முறை, பாண்டியன் செங்கோன்மை, தமிழ்ச்சிறப்பு முதலியனவும் கூறப்பட்டன.

இன்றுள்ள திரட்டுப் பரிபாடல்கள் இருபத்திரண்டே. அவற்றுள், திருமாலுக்கு 6-ம்,முருகனுக்கு 8-ம் வையைக்கு 8-ம் உரியன. ஏனைய பெரும்பாலும் இறந்துபட்டன.

முருகனுக்குரிய 5ஆம் பரிபாடல் ஆரியக் கட்டான கந்த புராணக் கதையைச் சுருக்கிக் கூறுகின்றது.

இற்றைத் திரட்டிலுள்ள 22 அல்லாது, திருமாலுக்கும் வையைக்கும் மதுரைக்கும் உரிய, முழுமையும் அரைகுறையு மான நான்கு பரி பாடல்கள் உரைமேற்கோள்களாக வந்துள்ளன.

ஒவ்வொரு பரிபாடற்கும் பின் பண் குறிக்கப்பட்டிருப் பதால், எழுபது பரிபாடலும் இசைப்பாக்களென்று தெரிகின்றது.