பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

171


9. நம்பா மத இலக்கியம்


எல்லா மதங்களும், கடவுள் நம்பிக்கை யுண்மையின்மை பற்றி, நம்புமதம் (உண்டு மதம்), நம்பா மதம் (இல்லை மதம்) என இருவகைப்படும். அவற்றுள், நம்பா மதமும், இம்மைபற்றியதும் மறுமை நோக்கியதும் என இருதிறப்படும். இம்மைபற்றியது உலகியம்; மறுமை நோக்கியது புத்தம். உலகியம் வடமொழியில் 'லோகாயதம்' என்றும் சார்வாகம் என்றும் பெயர் பெறும். சார்வாகன் (Cārvaka) இயற்றிய கொண்முடிபு நூலும் கடைப் பிடித்த மதமும் சார்வாகம்.

சார்வாகக் கொள்கை வருமாறு

காட்சி ஒன்றே அளவை. நிலம், நீர், தீ, வளி (காற்று) எனப் பூதம் நான்கே. அவற்றின் சேர்க்கையால் தோன்றிப் பிரிவால் மாய்வது உடம்பு. அவ் வுடம்பில் அறிவு மதுவின் வெறிபோல் வெளிப்பட்டழியும். இம்மையொடு வாழ்வு முடியும். மறுமை ல்லை. கடவுளும் இல்லை. உடம்பே ஆதன் (ஆன்மா). இன்பமும் பொருளுமே மாந்தன் பெறும் உறுதிப்பொருள். ஆதலால், உலகிலுள்ளவரை இயன்ற அளவு பொருளீட்டி இன்புற வேண்டும்.

இங்ஙனம் கொண்முடிபு முறையில் இல்லாவிடினும், கடவுளும் மறுமையும் இல்லை யென்றும் இம்மையில் இயன்ற வரை இன்பநுகர வேண்டுமென்றும் கொண்ட கொள்கை, சார்வாகன் தோன்று முன்பே, தொன்றுதொட்டு உலக முழுதும் இருந்து வந்திருக்கின்றது

கடவுளில்லை யென்பாரை நோக்கியே,

"உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்'

என்றார் திருவள்ளுவர்.

99

(குறள். 850)

"எள்ளாமை வேண்டுவான்” (281) என்னும் குறளுரையில், எள்ளாமை வேண்டுவான் என்னுந் தொடருக்கு வீட்டினை இகழாது விரும்புவான் என்று பொருளுரைத்து, வீட்டினை யிகழுதலாவது, “காட்சியே அளவை யாவதென்றும்..........இறந்த வுயிர் பின் பிறவா தென்றும்..... சொல்லும் உலகாயத முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கேற்ப ஒழுகுதல்” என்று சிறப்புரையுங் கூறினார் பரிமேலழகர்.