பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முருகுசுந்தரம் பாவேந்தரைப் பற்றி இப்படி ஒரு நூல் எழுத வேண்டும் என்று நான் அடிக்க்டி நினைத்ததுண்டு. அந்த எண்ணத்தின் செயற்பாடே பாவேந்தரைப் பற்றிய இந்நூல். உலகக் கவிஞர்களுள் பைரனுடைய வாழ்க்கைதான் சுவையான வாழ்க்கை. காதலும், வீரமும், அரசியலும் அவன் வரலாற்றில் போட்டி போட்டுக் கொண்டு விளையாடுகின்றன. அவன் வரலாற்றைப் படிக்கும் எந்தப் பெண்ணும் அவன்மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியாது. அவ்வளவு வசீகரக் கவிஞன் (Glamorous poet) அவன். பைரன் தனிச்சண்டைக்குக் (Single Combat) கூவி அழைத்தவன்; புஷ்கின் தனிச்சண்டையில் செத்தவன், ஷெல்லி கடற்புயலில் சிக்கி மாண்டவன்; லார்கா அரசியல் புயலில் சிக்கி மாண்டவன்; மாயகோவ்ஸ்கி தற்கொலையால் முடிந்தவன்; எஸ்ரா பவுண்ட் பயித்தியத்தால் மடிந்தவன்; ஃப்ரெஞ்சுப் பெருங்கவிஞன் ஃப்ரான்சுவா வில்லன் கொள்ளைக்காரனாகவே வாழ்ந்து வாழ்வை முடித்துக் கொண்டவன். சிலி நாட்டுப் புரட்சிக்குயில் பாப்லோ நெருடா தன் கால்களாலும் கவிதையாலும் உலகை அளந்தவன். ஒவ்வொரு கவிஞனின் வாழ்க்கையும் உள்ளத்தை நெருடும் ஒர் உணர்ச்சிக் காவியம். கவிஞன் வாழ்க்கையைச் சர்க்கரைப் பொங்கலுக்கு ஒப்பிடலாம். சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடப்பதுபோல், கவிஞர்கள் வாழ்க்கையிலும் சுவையான நிகழ்ச்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தட்டுப் படுவதுண்டு. ஆனால் பாவேந்தரின் வாழ்க்கை முழுவதும், உண்பவர் வாயில் மொருமொருவென்று உதிரும் வறுத்த முந்திரிப் பருப்பு. சுவையில்லாத நிகழ்ச்சியே அவர் வாழ்க்கையில் இல்லை என்று சொல்லலாம். பாவேந்தர் வாழ்க்கையில் வெளிவராத செய்திகள் நிறைய உள்ளன. மேலைநாட்டுக் கவிஞர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி கூச்சமின்றி அவர்களே எழுதியிருக்கிறார்கள்; பிறரையும் எழுத அனுமதிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் நிலை வேறு. நமது நாட்டில் தமது காதல் வாழ்க்கையை ஒளிக்காமல் துணிச்சலாக எழுதிய ஒரே கவிஞர் கண்ணதாசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? பாவேந்தருடைய காதல் வாழ்க்கையும் சுவையானதுதான். ஆனால் நான் அதில் கைவைக்கவில்லை. சரியான முறையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டால் பாவேந்தர்