பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 19 செய்திகளையே கூறுகிறார்கள். பாவேந்தர் வாழ்வில் இடம் பெற்ற கலை, இலக்கியம், அரசியல், சீர்திருத்தம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கூறுபவர் மிகச்சிலரே! பாவேந்தர் அவ்வப்போது கூறும் நுட்பமான இலக்கியச் செய்திகளைப் புரிந்து கொள்ளவும், அவற்றை நினைவில் வைத்திருந்து கூறவும் ஒரளவு தகுதி வேண்டும். அத்தகைய தகுதிபெற்ற நண்பர்கள் கூறும் செய்தி சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. கவிஞர்களுக்கே உரித்தான சாதாரண மக்களிடமிருந்து தம்மைத் தனிப்படுத்திக் காட்டும்படியான-பண்புகளும் விசித்திரமான போக்குகளும் பாவேந்தரிடம் நிறைய உண்டு. அவற்றுள் சிலவற்றை நான் பாவேந்தர் நினைவுகள் என்ற பகுதியில் எழுதியிருக்கிறேன். பாவேந்தரின் மக்கள் இத்தகைய செய்திகள் பலவற்றை அழகாகத் தமது கட்டுரைகளில் கூறிச் செல்கின்றனர். பாவேந்தரை அருகிலிருந்து ஆய்ந்தார்க்கே இதுபோன்ற செய்திகளைக் கூற இயலும். கவிஞர் சுரதாவும், வாணிதாசனும், புதுவைச் சிவமும், பொன்னடியானும் பாவேந்தர் பார்வையில் வளர்ந்த மாணவர்கள். இவர்களும் கவிஞர்கள். ஆகையால் பாவேந்தர் பற்றிப் புலமை நுணுக்கத்தோடு கூடிய அரிய பல செய்திகளைக் கூறியிருக்கிறார்கள். பாவேந்தரின் 50ஆவது வயதுக்கு முற்பட்ட குடும்பச் செய்திகளை உணர்ச்சிப்பூர்வமாக அவருடைய மூத்த திருமகளார் திருமதி சரசுவதி கூறியிருக்கிறார். அக்கட்டுரை படிப்பவர் உள்ளத்தைத் தொடும்படி அமைந்துள்ளது. பாவேந்தரின் இரண்டாவது மகளார் திருமதி வசந்தா நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். சொல்வதைச் சுவைபடச் சொல்கிறார். பாவேந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பல செய்தித்தாள்களில் சிறு சிறு துணுக்குகளாக நிறைய எழுதி வெளியிட்டுள்ளார். அஃதோர் தனி நூலாகவே அமையும் தகுதியுடையது. இந்நூலில் ஒரிரு செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். திருவாளர் மன்னர் மன்னன் பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை இளமையிலிருந்தே முறைப்படத் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கிறார். அது பாவேந்தரின் முழுமை பெற்ற வரலாறாக அமையும், அவருடைய கட்டுரையும் இத்தொகுப்பில் இடம் பெற்றால் சிறப்பாக இருக்குமென்று நினைத்து அவருக்குக் கடிதம் எழுதினேன். அவரும் உள்ளம் உவந்து ஒரு கட்டுரை அனுப்பி வைத்து இத்தொகுப்பைச் சிறப்பித்திருக்கிறார்.