பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 உள்ளத்தில்எழுதிய ஓவியம் எனக்கும் அவருக்கும் 1938-39ஆம் ஆண்டுகளில் பழக்கம் முதன் முதலாக ஏற்பட்டது. அப்போது கவி காளமேகம் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. புகழ்பெற்ற தமிழறிஞரும் பொறிஞருமான திருவாளர் பா. வே. மாணிக்க நாயகரின் பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் படக்கம்பனி வைத்திருந்தனர். பாவேந்தர் அங்குதான் தங்கியிருப்பது வழக்கம். கவிகாளமேகத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் யாவற்றையும் பாவேந்தரே எழுதினார். நாதசுவரச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்னம் காளமேகமாக நடித்தார். காளமேகத்துக்காகப் பாவேந்தரால் எழுதப்பட்ட பாடல்கள் அடையாறு பிராக் ஜோதி ஸ்டுடியோவில் முதன் முதலாக அரங்கேற்றம் செய்யப்பட்டன. அந்நிகழ்ச்சிக்கு நீதிக்கட்சியின் முன்னாள் அமைச்சர் திரு. எஸ். இராமநாதன் தலைமை வகித்தார். இசைமேதை ஜி.என். பாலசுப்பிரமணியம், திரு. தியாகராஜ பாகவதர், இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடல் அரங்கேற்றத்தைக் காண வந்திருந்தனர். பாவேந்தர் லாங் கோட் அணிந்து அவருக்கே உரித்தான கம்பீரத்தோடு காட்சியளித்தார். திருவாளர் இராஜரத்னம் பாடுவதற்காக எழுந்ததும் ஜி.என்.பி., பாகவதர், எம்.எஸ். ஆகிய மூவரும் எழுந்து நின்று கொண்டனர். இராஜரத்தினத்தின் இசைஞானத்துக்கு அப்படி ஒரு மரியாதை. அவர் பாட்டை விரும்பித் தொலைபேசியில் கேட்பவர் பலர். பாவேந்தரிடம் பேசிக் கொண்டிருப்பது சிறந்த பொழுதுபோக்கு சிரிக்கச் சிரிக்கச் சுவைபடப் பேசுவார். இலக்கியத்தில் யார் எந்த ஐயம் கேட்டாலும் உடனுக்குடன் சொல்லுவார். இலக்கணக் கருத்துகள் எப்போதும் விரல் நுனியில் (Finger tips) காத்திருக்கும். இலக்கணத்தை விளக்கி அதற்குரிய சூத்திரத்தையும் உடனே சொல்லுவார். 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்று வான்புகழ் வள்ளுவர் கூறிய கருத்து அவருக்கு மிகவும் பொருந்தும். அவர் அறியாத புதிய செய்தி ஒன்றையாவது கூறினால் அப்படியா!' என்று மூக்கின் மேல் விரல் வைத்து வியப்போடுக் கேட்பார். “கபிலர் எழுதிய எண்ணுரலே சாங்கியம். சாங்கியத்தின் அடிப்படையிலேயே திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார். திருக்குறளின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சாங்கியத்தின் அடிப்படையில் அதற்கு உரை காண வேண்டும்” என்று பாவேந்தர் அடிக்கடி கூறுவார். எனவே சாங்கிய நூலின் படி ஒன்று கிடைக்குமா என்று அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமிழறிஞர்களைக் கேட்பார். கடைசியில்