பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 25? மதுரை புதுமண்டபத்தில் அந்நூல் கிடைத்தது. கிடைத்தற்கரிய ஒரு பெரிய புதையலைக் கண்டெடுத்ததுபோல் பாவேந்தர் மகிழ்ச்சியடைந்தார். சாங்கியத்தைப் படித்து முடித்ததும் அந்நூலின் அடிப்படையில் திருக்குறளுக்குத் தாமே புத்துரை காணவேண்டும் என்ற எண்ணம் அவருள்ளத்தில் ஏற்பட்டது. உடனே அம்முயற்சியில் இறங்கினார். கடலூர் பிருந்தாவனம் விடுதியில் ஒர் அறை எடுத்துத் திருக்குறளின் பாயிரத்துக்கு உரையெழுதத் தொடங்கினார். அப்போது திருக்குறள் முனிசாமி பாவேந்தரைப் பார்க்க வந்தார். 'அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்கும் முதற் குறளுக்கு உரையெழுத மூன்று நாள் ஆராய்ச்சி நடந்தது. ஆதிபகவன் முதற்றே உலகு - என்று வள்ளுவர் பாடியிருக்கிறாரே! நடுவில் வந்த பகவன் யார்?" என்று நான் ஐயத்தைக் கிளப்பினேன். 'ஊரெல்லாம் பட்டி தொட்டி, உண்பதோ கம்பஞ்சோறு, பேரெல்லாம் பொம்மன் திம்மன், என்ற தனிப்பாடல் வரிகளை எடுத்து வைத்துக் கொண்டு அதற்குச் சிலேடைப் பொருள்கூறித் திருக்குறள் முனிசாமி கலாட்டா செய்து கொண்டிருந்தார். ஒருநாள் காலை 7.30 மணியிருக்கும்; வெளியில் சென்று விட்டு பாவேந்தர் பிருந்தாவன் விடுதி அறைக்குத் திரும்பினார். வழக்கம்போல் அறை சிற்றாள் காஃபி கொண்டு வந்தான். காஃபி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நானும் அமைதியாக இருந்தேன். சிந்தனையிலிருந்து விடுபட்டு சர்மா என்று கூப்பிட்டார். ஏன்? என்றேன் நான். "தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் என்ற பாட்டுக்கு ஒரு புத்துரை கூறப்போகிறேன். இரவு நேரத்தில் கணவன் மனைவியிடையே சண்டை. கணவன் முரடன். மனைவியை நன்றாக உதைத்துவிட்டான். சண்டைக்குப் பிறகும் அவன் மனைவியை விடவில்லை. அவளிடத்தில் இன்பம் துய்த்தான். இருவரும் களைப்போடு உறங்கிவிடுகின்றனர். மனைவி அதிகாலையில் கண்விழித்து எழுந்தாள் கணவனின் அடிகளைத் தொட்டு வணங்கினாள். ஏன்?" என்று கேட்டார் பாவேந்தர். நான் விழித்தேன்.