பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 உள்ளத்தில்எழுதிய ஓவியம் கொண்டே இருக்கும். கையில் ஊசி ஏறியது கூடத் தெரியாமல் அவர் எழுதிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். பாவேந்தருக்கும் எனக்கு இடையிலே இருந்த நட்பு ஆத்மார்த்தமானது. அவர் நினைவுகள் எல்லாம் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக இருக்கின்றன. "பாவேந்தர் ஆத்திகராக இருந்து நாத்திகராக மாறியவர். என்றாலும் கலையழகோடு கூடிய பக்திப்பாடல்களை மெய்மறந்து சுவைக்கும் இயல்புடையவர், பாவேந்தர் நடத்திய இன்பஇரவு நாடகக் குழுவிலிருந்து விலகியதும் நானே சில நண்பர்களின் உதவியோடு வேலின் வெற்றி என்ற திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அப்படம் வெளிவரவில்லை. அப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்காக மதுரை மாரியப்பன் சுவாமிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பக்திப் பாடல்களைக் கேட்பவர் உள்ளம் உருகும்படி பாடவல்லவர் அவர். அப்படத்துத் திரைக்கதை வசனம் பாடல்களைப் பாவேந்தர் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று நான் கருதினேன். ஆனால் பக்திப்படத்துக்கு எழுத ஒத்துக்கொள்வாரா என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. ஒருநாள் அவர் சென்னை வந்திருந்தபோது ஆயிரம் ரூபாயை நோட்டாகவும், வெள்ளி நாணயங்களாகவும் மாற்றி ஒரு தட்டில் வைத்து அவர் தங்கியிருந்த விடுதி அறைக் குச் சென்று அவர் முன்னால் வைத்து வணங்கினேன். என்ன சர்மா இது? என்றார் பாவேந்தர். நான் முதன்முதலாக ஒரு திரைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றேன். அது ஒரு புராணப் படம். நீங்கள் மறுக்காமல் அதற்குத் திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதித் தரவேண்டும். இது அதற்கு முன் பணம் என்று பணிவோடு சொன்னேன். அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் அப்படியா ரொம்ப மகிழ்ச்சி! உனக்கு எழுதாம வேற யாருக்கு எழுதப்போறேன்!” என்று சொல்லி ஒப்புக் கொண்டார். அதன்படி பாடல்களும் எழுதிக் கொடுத்தார். அப்பாடல்களை ரெகார்டிங் செய்வதற்காக நாங்கள் ஸ்டுடியோவில் கூடியிருந்தோம். அப்போது பாவேந்தரும் வந்திருந்தார். மதுரை மாரியப்பசுவாமிகள் அப்பாடல்களை உருக்கமாகப் பாடியதைக் கேட்டு உள்ளம் உருகிய பாவேந்தர் "அடேயப்பா இவர் பாடும்போது அந்த முருகனே கையில் வேலோடு கண் எதிரில வந்து நிக்கற மாதிரியல்ல இருக்குது என்று பாராட்டிக் கூறினார்."