பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 287 இருந்தேன். அதுதா. சும்மா பேசிக்கிட்டிருக்கலாமுன்னு கூப்பிட்ட. அவ்வளவுதா...' என்றார். நான் அப்போது பாவேந்தரைப் பார்க்கவில்லை. ஒரு குழந்தையைத் தான் பார்த்தேன். என் மனைவி பூபதி மீனைத் தொடாதவள். பாவேந்தருக்காகத் தொட்டுச் சமைத்துப் பழகினாள். சாப்பாடு பரிமாறும்போது என் மனைவியைப் பார்த்து, "மீனை நிறையவை. தொட்டுக்கக் கொஞ்சம் சாப்பாடு வை. நீயும் சாப்பிடு, உடம்புக்கு நல்லது” என்று கூறுவார். கவிதை அவர் சொல்ல நான் எழுதுவேன். பிறகு திருத்துவார். துண்டு துண்டாக வேடிக்கைக்குச் சில கவிதைகள் சொல்வார். நான் எழுதி முடித்ததும் படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்துப் போட்டு விடுவார். திருச்சி வானொலி நிகழ்ச்சிக்காகத் தொழில்’ என்ற தலைப்பில் பாவேந்தர் கவிதை சொல்ல என் மனைவி எழுதினாள். அக்கவிதை பாரதிதாசன் கவிதைகள் - இரண்டாம் தொகுதியில் உள்ளது. விருதுநகரில் திருக்குறள் மாநாடு. பெரியார் பேசும்போது, "மற்ற புராண இதிகாசங்களைப் போலத் திருக்குறளும் மோசந்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. இதுவும் தமிழருக்கு ஒவ்வாத நூலே!" என்று கூறினார். பெரியாருக்குப்பின் பேச எழுந்த பாவேந்தர் பெரியார் பேச்சை மறுத்தார். லேசாகக் கூட்டத்தில் அதிருப்திக் குரலும், ஆரவாரமும் எழுந்தது. பாவேந்தர் பேச்சை முடித்துக் கொண்டார். பிற்பகல் நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று கூறி இவரைத் தடுத்து நிறுத்தி விட்டோம். விருதுநகரிலிருந்து திரும்பும்போது நாங்கள் ஏறி வந்த புகைவண்டி திருப்பரங்குன்றத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இருப்புப்பாதை அருகில் தொழிலாளர் குடியிருப்புக் கட்டப்பட்டிருந்தது. பெட்டிபோல் இருந்த அந்தச் சிறிய வீடுகளைப் பார்த்த பாவேந்தர் நூறுபுறாக்கள் குடியிருக்கலாம் என்று குறிப்பிட்டார். மணிவிழாச் சமயத்தில் ஒருநாள் கவிஞர் திருலோக சீதாராம் பாவேந்தர் தங்கியிருந்த அசோகா லாட்ஜ் அறைக்கு வந்தார். "சுப்ரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாள் திருச்சியில்தான் இருக்கிறார். போய்ப் பார்த்துவிட்டு வரலாம்” என்று கூப்பிட்டார். 'ஐயரின் மனைவியா? என்று கூறிவிட்டு அவசரமாக எழுந்தார். நானும் உடன் சென்றேன். செல்லம்மாளின் முன் விழுந்து வணங்கினார் பாவேந்தர். "யாரு சுப்புரத்தினமா? மொரட்டுப் பயலாச்சே! பிள்ளை குட்டி நாலைஞ்சு ஆயிடுச்சல்ல... இன்னம் மொரட்டுத்தனம் இருக்காதே!” என்றார் செல்லம்மாள். இல்லம்மா! என்று பணிவாகச் சொன்னார் இந்த நல்ல பிள்ளை!