பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 பாட்டுக்குழந்தை பாரதிதாசன் எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள். தனையின்ற தமிழ்நாடு தனக்கும்என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாளெனக்குத் திருநாள் ஆகும் - என்று பெருமிதத்தோடு தமிழினத்துக்காகப் பாடிய அதே கவிஞர், துயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலகமக்களெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே. என்று உலக மக்களுக்காகவும் பாடுகிறார். அவர் உள்ளம் வியப்பானது. அவர் உள்ளத்தின் இரகசியங்களை நாம் ஆய்ந்து உணர வேண்டும். அம்முயற்சியின் விளைவே இக்கட்டுரை. அவர் வாழ்க்கைக் கடலின் ஒரத்தில் விளையாடித் திரிந்த நான் அக்கடலிலும் மூழ்கிச் சில முத்துக்களை எடுத்து வழங்கியுள்ளேன். மனித நாகரிகம் ஆற்றோரங்களில் ஆரம்பமானது என்று ஆய்வாளர்கள் கூறுவர். காவிரி, தென்பெண்ணை ஆறுகள் தமிழ் மன்னர்களின் பெருமையையும் பண்பாட்டையும் உந்திச்சுழித்து ஒடுபவை. எனவே ஆற்றங்கரையில் அமைந்த சிற்றுார்களில் தம் மூன்று பெண்களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் பாவேந்தர். திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையிலே அமைந்த சிற்றுார் கட்டிப் பாளையம். அந்த ஊரைச் சேர்ந்த புலவர் கண்ணப்பருக்குத் தம் மூத்தமகள் சரசுவதியைத் திருமணம் செய்து கொடுத்தார். இரண்டாவது மகள் வசந்தாவை தென்பண்ணையாற்றங் கரையில் உள்ள மேல்பட்டாம் பாக்கத்தில் என் அண்ணன் தண்டபாணி அவர்கட்குத் திருமணம் செய்து கொடுத்தார். மூன்றாம் மகள் இரமணியை, சேலம் மாவட்டத்துக் காவிரிக் கரையூராகிய மணப்பள்ளியில் சிவசுப்பிரமணியம் அவர்கட்குத் திருமணம் செய்து கொடுத்தார். பாவேந்தர் விரும்பியிருந்தால் தம் பெண்களுக்குப் புதுவையிலே மாப்பிள்ளை தேடியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் வேறுபட்ட கலை, பழக்க வழக்கங்கள் உள்ள தொலைவூர்களில் பெண் கொடுத்ததும், கருநாடக மாநிலத்தில் தம் ஒரே மகன் கோபதிக்குப் பெண்ணெடுத்ததும் அவர் புதிய உறவுகளை விரும்பி வரவேற்றவர் என்பது புலனாகும். பெண் எடுப்பதும், கொடுப்பதும் அருகில் இருக்கக் கூடாது என்பது அவர் கொள்கை. தம் பெண்களின் திரு மணத்தைப் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் இக்கொள்கையைப் பெருமிதத்தோடு பிரகடனப்படுத்துவார் பாவேந்தர்.