பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 _அந்தநாட்கள் இப்புலவருக்கு வயது 70 இருக்கும். ஒரு நாள் மாலை நான் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது குருவும் சீடரும் குறட்டுப் பலகையில் அமர்ந்து இலக்கியச் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். இன்னும் சிலரும் உடனிருந்தனர். விசுவலிங்கம் பிள்ளை என்னைப் புலவருக்குக் காட்டி இந்தப் பையன்தான் இங்கே தமிழ் வாத்தியார் என்று சொன்னார். புலவர் என்னைக் கூப்பிட்டார். அவர் என்னைக் கூப்பிட்ட தோரணையே, எனக்குச் சுர்ரென்று கோபம் வரும்படி செய்தது. இருந்தாலும் அவருடைய முதுமைத் தோற்றத்துக்கு மதிப்புக் கொடுத்து அடக்கமாகக் குறட்டின் மேல் அமர்ந்தேன். புலவர் இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு முலைசுரந்த அன்னையோ முன்னின்-நிலைவிளம்பக் கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா இங்குயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு என்ற நால்வர் நான்மணிமாலைப் பாடலைப் பாடிப் பொருள் தெரியுமா?" என்று கேட்டார். "பொருள் தெரியும்" என்று நான் சொன்னேன். “ஞானசம்பந்தருக்கு அன்னையர்களாக இப்பாடலில் இருவர் குறிப்பிடப்படுகின்றனர். ஒருவர் உமாதேவியார் மற்றொருவர் பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசியார். இந்த இருவருள் எவர் சிறந்த அன்னை?” என்று என்னை அடுத்த கேள்வி கேட்டார் புலவர். "மங்கையர்க்கரசிதான்” என்று நான் அழுத்தந் திருத்தமாக விடை கூறினேன். "எப்படி?” என்றார் புலவர். "குழந்தை பசியால் அழுமுன்பே பால் நினைந்துாட்டும் தாய் தலையன்புடையவள். குழந்தை அழுவதைக் காதால் கேட்டவுடன் முலைசுரந்து ஊட்டுபவள் இடையன்புடையவள். குழந்தை பசியால் அழுவதைக் கண்ணால் கண்ட பிறகு பாலூட்டுபவள் கடையன் பினள். சம்பந்தக் குழந்தை பொய்கைக் கரையிலே பாலுக்காக ஏங்கியழுததைக் கண்ணால் கண்ட பிறகும் உமாதேவி பாலூட்ட வில்லை. இறைவன் உணர்த்திய பிறகே ஊட்டினாள். இவளை எவ்வாறு தாயென்று சொல்லமுடியும்? ஆனால் மங்கையர்க்கரசியின் நிலைவேறு. சீகாழியில் சம்பந்தக் குழந்தை பாலுக்காக அழுதது என்ற இறந்தகால நிகழ்ச்சியை எதிரில் நின்றவர்கள் எடுத்துரைத்த கணமே பாண்டிமாதேவியின் மார்பகங்கள் விம்மிப் பரந்து பாலைப் பொழிந்தன.