பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 65 கண்டதும், “என்ன வெளியில் போகலாமா? கொஞ்சம் வேலையிருக்கிறது?’ என்று சொன்னார். பொன்னடி சகானிஸ் அருகில் சென்று டாக்சி கூட்டி வந்தார். குயில் பத்திரிகைக் காகிதக் கோட்டா அப்போது வந்திருந்தது. அது மூன்று திங்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்தது என்று எண்ணுகிறேன். அதை எடுக்க ரூ. 5000 வேண்டும். பாவேந்தர் கையில் பணமில்லை. அது சம்பந்தமாக இரண்டு மூன்று பேரைப் பார்த்தோம். ஒவ்வொருவரும் பாவேந்தரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று கைகூப்பி வணங்குவர்; அடக்கமாக எதிரில் நின்று சிற்றுண்டியும் சுவைநீரும் வழங்குவர்; பணப்பேச்சை எடுத்தால் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி மெதுவாகக் கழன்று கொள்ளுவர். பணத்துக்காக ஒரு பெருங் கவிஞன் இவ்வாறு அவமானப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; மிகவும் வேதனையாக இருந்தது. இந்தச் சமயத்தில் செக் நாட்டுத் தமிழ் அறிஞரான முனைவர் காமில் ஸ்வலபில் அவர்கள் தம் நாட்டுப் பிரபலப் பத்திரிகையான நோவி ஓரியண்டில் பாவேந்தர் பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அதில் பாவேந்தர் படமும், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் கூட வெளியிடப்பட்டிருந்தன. அந்த இதழின் படி ஒன்றைப் பாவேந்தருக்கு அவர் அனுப்பி வைத்ததோடு ஒரு கடிதமும் எழுதியிருந்தார் அதில் பாவேந்தர் எழுதிய நூல்கள் அனைத்திலும் ஒவ்வொரு படி திரட்டி அனுப்பும்படி கேட்டிருந்தார். அவருக்கு அனுப்புவதற்குச் சில நூல்களின் படிகள் கிடைக்காமல் இருந்த காரணத்தால் நானும் பாவேந்தரும் பாரி நிலையம் சென்றோம். அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் கணக்கெடுப்புக்காகப் பாரி நிலையம் உள்ளே திறந்து வைக்கப்பட்டிருந்தது. பாரி நிலையம் மாடியின் மேல் உள்ளது. அதன்மாடிப் படி செங்குத்தானது. அதன்மேல் பாவேந்தரால் ஏறமுடியவில்லை; மூச்சு வாங்கியது. எனவே நான் மட்டும் மேலே சென்று அதன் உரிமையாளரான திரு செல்லப்பன் அவர்களிடம் பாவேந்தர் வந்திருப்பதாகச் சொன்னேன். அவர் கீழே இறங்கி வந்தார்; தேவையான நூல்களைக் கட்டாகக் கட்டிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு பாவேந்தரும் நானும் இல்லம் திரும்பினோம். பாவேந்தர் இல்லத்தில் இடைவேளை உணவு சாப்பிட்டுவிட்டு ஒய்வெடுத்துக் கொண்டேன். மாலையில் அவர் அறைக்குள் 1. காண்க: பிற்சேர்க்கை-2