பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 95 கொட்டகைக்குச் செல்வதாக இருந்தாலும் பொன்னடியைப் போய் வாடகைக்காரர் கூட்டி வரும்படி சொல்லுவார். அப்போது குறைந்த மீட்டர் கட்டணம் எட்டணாதான். அதைக் கொடுத்துவிட்டு இறங்கிக் கொள்வார். தளர்ச்சியின் காரணமாக அவரால் அப்போது அதிகம் நடக்க முடியாது. எங்காவது நானும் அவரும் வெளியில் செல்லும்போது நான் வாடகைக் காரைக் கூப்பிட்டால் வேண்டாம்; எதற்கு வீண் செலவு? ஆட்டோ ரிக்ஷாவில் போகலாம். அது நல்லா காற்றோட்டமா இருக்கும்; ஜிகுஜிகுன்னு போகும் என்று குழந்தை போலக் கூறுவார். என் கைப்பணம் அதிகம் செலவாகக் கூடாது என்பதற்காக அவர் அவ்வாறு கூறுகிறார் என்பதை நான் அறிந்து கொள்வேன். "பரவாயில்லை ஐயா! காரிலேயே போகலாம்’ என்று நான் வற்புறுத்திச் சொன்னபிறகு ஏறிக் கொள்வார். காரில் எப்போதும் முன் சீட்டில் காரோட்டிக்குப் பக்கத்தில் தனியாகவே உட்கார்ந்து கொள்வது வழக்கம். தவிர்க்க முடியாமல் எங்காவது மாடிப்படியில் ஏற வேண்டுமானால் 'முருகு, இங்க வா!' என்று சொல்லித் தாங்கலாக என் தோள்மேல் கை போட்டுக் கொண்டு வருவார். பாவேந்தர் எப்போதும் தூய்மையாக இருப்பார். நாள்தோறும் முகத்தை வழித்துக் கொண்டு பளிச்சென்று காட்சியளிப்பார். பாவேந்தரின் பொருளாதாரக் கொள்கை திட்டமில்லாதது. கையில் எவ்வளவு பணமிருக்கிறது? எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? என்று அவர் சிந்திப்பதில்லை. நான் அவரோடு நெருங்கிப் பழகிய சில மாதப் பழக்கத்திலிருந்து அவர் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அவர் பணத்தை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. சென்னையில் அவர் வாழ்ந்தபோது அவர் படுக்கை அறை எப்போதும் திறந்தே இருக்கும். அந்த அறையில் பாதுகாப்பாகப் பொருள்களை வைப்பதற்கு இரும்புப் பீரோவோ பெட்டியோ கிடையாது. பயணத்தின் போது பயன்படும் ஒரு தோல் பெட்டி (Leather Suitcase) மட்டுமே இருக்கும். அதுவும் பூட்டப்படாமல் இருக்கும். ஒருநாள் எதற்காகவோ அதை நான் திறந்தபோது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. "என்னய்யா! இவ்வளவு பணம் இதிலே இருக்கிறது. பூட்டாமல் வைத்திருக்கிறீரே?’ என்று கட்டிலின் மீதமர்ந்திருந்த பாவேந்தரைக் கேட்டேன். "ஏ...ஏ....பூட்டணும்? யார் எடுக்கறா?' என்று அசிரத்தையாக விடையிறுத்தார். தேவை ஏற்படும்போது தான் பணத்தைப் பற்றி நினைப்பார். மற்ற நேரங்களில் அதைச் சட்டை செய்ய மாட்டார். பேண மாட்டார்.