பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நினைவில் நின்றவை திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையும் சேமிக்கும் பழக்கமும் அவருக்கிருந்திருந்தால் பல லட்சங்கள் அவர் வாழ்க்கையில் சேர்ந்திருக்கும். கி.பி. 1946ஆம் ஆண்டு அவருக்கு நிதியளிப்பு விழாவில் ரூ.24,500 வழங்கப்பட்டது. அக்காலத்தில் கால் லட்சம் என்பது சாதாரணத் தொகையன்று. கணிசமான பெரிய தொகை. பாவேந்தர் வாழ்ந்த காலத்தில் கவிதை, உரைநடை, நாடகம் என்று கிட்டத்தட்ட 60 நூல்கள் அவர் படைப்புக்களாக வெளிவந்தன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கவை பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி), பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம் என்பன. புதுவைப் பெருமாள் கோயில் தெரு வீட்டை விலைக்கு வாங்கிய நேரத்தில் ஏற்பட்ட பண நெருக்கடி யால் மிகக் குறைந்த தொகைக்கு (ரூ.4000/- என்று நினைக்கிறேன்) இந்த நூல்களின் பதிப்புரிமையைப் பதிப்பகத்தாருக்கு விற்றுவிட்டார். பிறகு இந்த நூல்களுக்கும் பாவேந்தருக்கும் எந்தவிதப் பொருளாதாரத் தொடர்பும் இல்லை. ஆனால் இந்த நூல்களின் விற்பனையை வேறு எந்தத் தமிழ்க்கவிதைநூலும் எட்டிப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி அவர் வாழ்ந்த காலத்திலேயே 15 பதிப்புகள் வெளிவந்துவிட்டது. இந்த வெற்றி எந்த தமிழ்க் கவிஞனுக்கும் இதுவரை கிட்டவில்லை. இவ்வளவும் நான் எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், இந்நூல்களின் விற்பனையில், பாவேந்தர் எவ்வளவு ஏமாளியாக நடந்து கொண்டார் என்பதைக் குறிப்பிடத்தான். தாம் கதை வசனம் எழுதிய வளையாபதி திரைப்படத்தில் சில வரிகளை மாற்றி விட்டார்கள் என்பதற்காக மாடர்ன் தியேட்டர்ஸாரின் ரூ. 40,000 ஒப்பந்தத்தைத் துக்கி எறிந்துவிட்டு வந்த செயல் பணவிஷயத்தை அவர் எவ்வளவு லேசாக எடுத்துக் கொண்டார் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு. ஆபத்துக் காலங்களில் எளியவருக்குப் பொருள் கொடுத்து உதவும் தாராள நோக்கும் அவரிடத்தில் உண்டு. பாவேந்தர் சென்னையில் குடியிருந்தபோது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பட்டு என்னும் வேலைக்காரி தன் மகனுக்குத் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். திடீரென்று ஒருநாள் அவள் அழுதுகொண்டு பாவேந்தரிடம் வந்தாள். பாவேந்தர் என்ன என்று விசாரித்தார். மகனுடைய திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் வேறு சில பொருட்களையும் தன்னுடைய குடிசையில் புகுந்து யாரோ திருடிக் கொண்டுபோய்விட்டதாகச் சொல்லி அழுதாள். திருமணத்துக்கு முகூர்த்தம் வைத்தாயிற்று. உடனே பாவேந்தர் அவளிடத்தில் நூறு ரூபாயைக் கொடுத்ததோடு குறித்தபடி திருமணத்தை நடத்தத் தம் பங்களாவையும் ஒழித்துக் கொடுத்தார்.